பெரம்பலூர் அருகே கோர விபத்து: ஆம்னி பேருந்து மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு
Perambalur Accident - 4 Dead: திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கார்த்தி தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் காரில் இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களது கார் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 24, 2026: பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH-38) முன்னால் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறம் கார் வேகமாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (38). சென்னையில் வேலை செய்து வரும் இவர், தனது சகோதரரின் திருமணத்திற்காக மனைவி சூர்யா மற்றும் சென்னையில் தன்னுடன் பணிபுரியும் தனது கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் முதுகுளத்தூருக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: “ரூ.10,000 வரை உயர்ந்த சம்பளம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு!
ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்து:
திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, கார்த்தி தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் காரில் இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களது கார் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் நகர போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்:
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்த காஜா என்ற காளீஸ்வரன் மற்றும் ராசிகுளத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார்த்தி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், கார்த்தியின் மனைவி சூர்யா, கார் ஓட்டுநர் கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், கார்த்தியின் மனைவி சூர்யா பலத்த காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் படிக்க: கோவையில் கொடூரம்.. 2 சவரன் நகைக்காக பட்டப்பகலில் பெண் கொலை.. உடைந்த வளையலால் சிக்கிய கொலையாளி..
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.