செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. வி.சி.கவில் இருந்து பனையூர் பாபு விலகல்..
கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாத தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என கனத்த இதயத்தோடு செய்யூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மே 24, 2026: பனையூர் பாபு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதாக இல்லை எனக் குறிப்பிட்டு அவர் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், புரட்சியாளர் பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றதில் திருமாவளவனின் பங்கு மிகப்பெரியது என பாராட்டியுள்ளார். சாதி மற்றும் மதவெறி சக்திகளை சமரசமின்றி எதிர்த்த தலைவராகவே அவரை நம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியிட்ட பனையூர் பாபு:
2007ஆம் ஆண்டு திருமாவளவனை சந்தித்ததிலிருந்து தனது அரசியல் பயணம் தொடங்கியதாக கூறியுள்ள பனையூர் பாபு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் ‘இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை’ மாநில துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும், ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி வளர்ச்சிக்காக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: “திமுக முதுகில் குத்திய காங்கிரஸ், முதல்வர் விஜய் முதுகிலும் குத்தும்” .. தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், சட்டமன்ற உறுப்பினராக ஆதி திராவிடர் மக்களுக்காக பல கோரிக்கைகளை முன்வைத்து சாதனைகள் படைத்ததாக தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் மணிமண்டபம், இரட்டைமலை சீனிவாசன் நினைவிடம், எல். இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்கோரிக்கைகளை அரசாணைகளாக மாற்றிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடு வேதனை அளிக்கிறது:
அதே நேரத்தில், சமீப காலங்களில் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறி வருவது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். “நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று வேறு நிலைப்பாடு, சமூக வலைதளங்களில் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள்” என அரசியல் குழப்பம் உருவாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: திடீர் உடல்நலக்குறைவு.. கோவை மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி..
மேலும், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பெற்றெடுத்த பிள்ளை” என்று விமர்சித்த நடிகருடன் தற்போது இணைவது, இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்தார்.
“அம்பேத்கரும் பெரியாரும் வகுத்துத் தந்த கொள்கைகளே நிலையானவை. ஆனால் இன்று மக்கள் சித்தாந்தங்களை விட கவர்ச்சியின் பின்னால் ஈர்க்கப்படும் ஆபத்தான திசையில் இயக்கம் சென்று கொண்டிருக்கிறது” என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “கொள்கையிலும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாத தலைமையின் கீழ் இனி பயணிக்க முடியாது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என கனத்த இதயத்தோடு அறிவித்துள்ளார்.
மேலும், நான் கட்சியிலிருந்து விலகினாலும், அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட கொள்கைகளிலும், கருத்தியலிலும் இம்மியளவும் பின்வாங்காமல் உறுதியாக நின்று பயணிப்பேன் புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.