சிலிண்டர் தட்டுப்பாடு.. விண்ணை முட்டும் உணவு பொருள்கள் விலை.. தொழிலாளர்கள் கடும் வேதனை!
Food Prices Rise Sharply: தமிழகத்தில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூரில் டீ, பலகாரங்கள் மற்றும் உணவு பொருள்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .

தஞ்சாவூரில் உணவு பொருள்கள் விலை உயர்வு
அமெரிக்கா – ஈரான், இஸ்ரேல் இடையே நிகழ்ந்து வரும் போர் சூழல் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுவதால் உணவகங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதனிடையே, வணிக சிலிண்டருக்கான விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், அரசு தரப்பில் ரூ.1,700, ரூ.1,800 என இருந்த சிலிண்டர் விலை போர் காரணமாக ரூ.2,350- ஆக அதிகரித்துள்ளது. இதில், தனியார் நிறுவன சிலிண்டர்கள் எடைகளுக்கு ஏற்ப ரூ.3,200, ரூ.3,800 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக சில நேரங்களில் ரூ.4 ஆயிரத்துக்கும், ரூ.5 ஆயிரத்துக்கும் கிடைப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீ – உணவு பொருள்கள் விலை கடும் உயர்வு
மொத்தத்தில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு வகைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதில், டீ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.15, ரூ.20 ஆகவும், ரூ.15- க்கு விற்பனை செய்யப்பட்ட காபி ரூ. 20, ரூ.25- ஆகவும், ரூ.7- க்கும் விற்பனை செய்யப்பட்ட பலகாரம் ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதே போல, ஹோட்டல்கள், சிற்றுண்டிகளில் ரூ.6, ரூ.10, ரூ.12 -க்கு விற்கப்பட்ட ஒரு இட்லி விலை ரூ.10, ரூ.12, ரூ.15- ஆகவும், தோசை விலை ரூ.20, ரூ.30, ரூ.40- இல் இருந்து ரூ.30, ரூ.35, ரூ.45 – ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குடிக்க தண்ணீர் கேட்பது போல நாடகம்.. மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை அபேஸ்.. 2 கல்லூரி மாணவிகள் கைது!
ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுவதென்ன
பூரி ரூ.30- இல் இருந்து, ரூ.40- ஆகவும், மதிய உணவு ரூ.80, ரூ.90, ரூ.100- இல் இருந்து ரூ.90, ரூ.100, ரூ.110- ஆகவும் உயர்ந்துள்ளன. இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் எரிவாயு உருளைகள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் சமையல் எண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, வேறு வழி இல்லாமல் உணவுப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.240 வரை செலவு ஆவதாக புலம்பல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களில் வேலை நிமித்தமாக தங்கி இருந்து வருகின்றனர். தற்போது, வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக உணவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், டீக்கடைகளில் ஒரு நாளைக்கு தேநீர் மற்றும் பலகாரம் அருந்துவதற்கு ரூ.160 செலவு ஆன நிலையில் தற்போது, அது ரூ.200 முதல் ரூ.240 வரை செலவு ஆவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு 4 முறை தேநீர் அருந்தி வந்த நிலையில், தற்போது, 2 முறையாக குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வறுத்தத்துடன தெரிவித்தனர்.
மேலும் படிக்க: துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!