Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதி கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!!

‘தித்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. தொடர்ந்து, 4 மாவட்டங்களில் இன்றைய தினம் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளையும் அதி கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!!
மாதிரிப்படம் (AI)
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Nov 2025 11:42 AM IST

சென்னை, நவம்பர் 28: கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக நேற்றைய தினம் (நவ.27)வலுப்பெற்றது. ‘தித்வாஎன பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்குவடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு 530கி.மீ தூரத்திலும், புதுச்சேருக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

மேலும் படிக்க : நவ.29 அன்று தமிழகத்தில் கொட்டித் தீர்க்க உள்ள கனமழை.. வெதர்மேன் எச்சரிக்கை!

கனமழை வெளுத்து வாங்கும்:

தொடர்ந்து, புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 30ம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை:

அதன்படி, இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், இதுதவிர ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: இலங்கையை புரட்டிப்போட்ட தித்வா புயல் – இதுவரை 20 பேர் பலி, 14 பேர் மாயம் – தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

3 மாவட்டங்களுக்கு மதியம் விடுமுறை:

இந்நிலையில், அதி கனமழை எச்சரிக்கை காரணமாக புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மதியத்திற்கு மேல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.