வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை…முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்!
ED Raids Vellore CMC Hospital: வேலூரில் உள்ள சி. எம். சி. மருத்துவமனை மருத்துவர்கள் தங்கும் குடியிருப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் நடைபெற்ற இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலூரில் பிரபலமான சிஎம்சி (கிறிஸ்டியன் மருத்துக் கல்லூரி) மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த பீஜியன் என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவருடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறைக்கு புகார் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சுமார் 7- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 16) திடீரென புறப்பட்டு வேலூரில் உள்ள சி. எம். சி. மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களுக்கான குடியிருப்பு அமைந்திருக்கும் தோட்டபாளையத்தில் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மருத்துவர் பீஜியன் தங்கி இருந்த அறையில் சோதனை மேற்கொள்ளப்பட்து.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை
இந்த திடீர் சோதனையால், இந்த வளாகத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியில் இருந்து உள்ளே வரவோ அனுமதிக்கப்படவில்லை. மேலும், குடியிருப்பு வளாகத்தின் வாசல் கதவு மூடப்பட்டு போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கி பலியான தம்பதி….தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்!




சிஎம்சி மருத்துவமனையிலும் சோதனை
இதே போல, சிஎம்சி மருத்துவமனை வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் நிர்வாகத்தில் வரவு மற்றும் செலவு கணக்குகள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது வரி ஏய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் சோதனை நடைபெற்றது.
அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள்
இதே போல, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதி மற்றும் பெரிய அளவிலான பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் தங்கும் விடுதியில் சில டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் கைகளில் சிக்கி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சோதனை குறித்து அதிகாரப்பூர்வு தகவல் இல்லை
இந்த சோதனையில் ஏதேனும் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், இந்த சோதனை குறித்தும் அமலாக்கத்துறை மற்றும் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. இன்று காலை தொடங்கிய சோதனையானது தற்போது வரை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தவெகவின் அடுத்தக் கட்ட பாய்ச்சல்…10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்!