பிறந்த குழந்தைக்கு நேர்ந்த சோதனை…செவிலியர் செய்த கவனக்குறைவான செயல்!
Nurse Cuts Off Baby Finger: கிழக்கு சீனாவில் பிரசவித்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு பதிலாக இடது கையின் நடு விரலை செவிலியர் வெட்டினார். இதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் விரல் சரி செய்யப்பட்டது. செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிழக்கு சீனாவின் ஜியான் மாகாணத்தில் உள்ள சூய் கவுண்டியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, அந்த குழந்தையின் தொப்புள் கொடியை செவிலியர் அகற்ற முயன்றனர். எதிர்பாராத விதமாக குழந்தையின் தொப்புள் கொடிக்கு பதிலாக, இடது கை நடு விரலை செவிலியர் வெட்டினார். இதில், குழந்தையின் கை விரல் கிட்டத் தட்ட துண்டாகும் நிலைக்கு சென்றது. ரத்தம் கொட்டிய நிலையில், குழந்தை கதறி அழுதது. இதைத் தொடர்ந்து, குழந்தை இரு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய சுகாதார மையமான வுக்ஸி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
குழந்தைக்கு தசை நார்-நரம்பு துண்டிப்பு
அங்கு, குழந்தையை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சோதனை செய்ததில் தசை நார் துண்டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், குழந்தையின் கை விரல் சிறியதாக இருப்பதால் நரம்புகள் மீண்டும் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, குழந்தையின் இடது கையின் நடு விரல் சரி செய்யப்பட்டது. குழந்தையின் தொப்புள் கொடியை அகற்றிய போது, எதிர்பாராத விதமாக குழந்தை கையை அசைத்ததால் விரல் வெட்டப்பட்டதாக செவிலியர் விளக்கம் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..




விரலை வெட்டிய செவிலியர் பணியிடை நீக்கம்
இது தொடர்பாக, சூய் கவுண்டியின் சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இது செவிலியரின் தவறான அணுகுமுறையாகும். குழந்தைக்கான உள் வைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது, குழந்தை சூய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தையின் எதிர்கால சிகிச்சையின் முழு பொறுப்பையும் சூய் மருத்துவமனை ஏற்றுக்கொள்கிறது. குழந்தையின் கைவிரலை வெட்டிய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, குழந்தையின் தந்தை ஷெங்கின் கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது, குழந்தையின் விரலுக்குள் ஊசி செலுத்தப்பட்டதால் குழந்தை அதிக அளவு வலியை அனுபவித்தது.
சூய் மருத்துவமனை சார்பில் ரூ.12.95 லட்சம் இழப்பீடு
சூய் மருத்துவமனை சார்பில் ரூ.12.95 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. தற்போது வரை பிரசவ அறையில் சரியாக என்ன நடந்தது. தொப்புள் கொடியே வெட்டுவதற்கு பதிலாக குழந்தையின் கைவிரல் எப்படி தவறுதலாக வெட்டப்பட்டது என்பது தொடர்பான முழு விவரத்தை மருத்துவமனை நிர்வாகம் எனக்கு தெரிவிக்கவில்லை. வருங்காலத்தில் எனது குழந்தைக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு எவ்வளவு செலவாகும் என்பது எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ரூ.12.95 லட்சம் போதாது என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: 2 மகன்களை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி தாய்.. அமெரிக்காவில் பயங்கரம்!