கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கி பலியான தம்பதி….தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்!
Couple Dies In Kanyakumari : கன்னியாகுமரியில் டெம்போ வேன் மோதிய விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவுக்கு சுற்றுலா சென்று விட்டு கன்னியாகுரக்கு சுற்றிப் பார்க்க வந்த நிலையில், இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது .
கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது ஐயப்பன் சீசன் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். அதன்படி, விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளும் கேரளாவுக்கு சுற்றுலாவுக்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம், அதலாபாத் பகுதியை சேர்ந்த சுமார் 50 ஐயப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலாவாக சென்றனர். இவர்கள், நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 15) சபரிமலை சென்று விட்டு, கன்னியாகுமரிக்கு சுற்றி பார்ப்பதற்காக வந்தனர். அப்போது, பேருந்தை கன்னியாகுமரியின் நான்கு வழிச்சாலை பகுதியில் ஓரமாக நிறுத்தி விட்டு அனைவரும் அந்த பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர்.
சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது மோதிய டெம்போ
அப்போது, அலதாபாத் பகுதியை சேர்ந்த பாலகுருதி சத்ய நாராயணா மற்றும் அவரது மனைவி ரமா தேவி ஆகியோர் 4 வழிச் சாலையை கடந்து அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்ப்பதற்காக செல்ல முயன்றனர். அப்போது, அந்த வழியாக தண்ணீர் கேன்கள் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டெம்போ வேனானது, எதிர்பாராதவிதமாக கணவன், மனைவி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் படிக்க: திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!




மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த தம்பதி
உடனே, உடன் சென்றவர்கள் தம்பதி இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தம்பதியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் தம்பதியின் சடலங்களை மீட்டு உடல் கூராய்வுக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் பலியான சம்பவம்
மேலும், விபத்து குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றி பார்க்க வந்த இடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியின் சடலங்கள் உடல் கூராய்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர்களது உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறி பாயும் காளைகள், அடக்கும் வீரர்கள்.. முன்னிலை நிலவரம்!!