தவெகவின் அடுத்தக் கட்ட பாய்ச்சல்…10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்!
TVK Election Campaign Committee: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார குழுவை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில், 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவானது 234 தொகுதிகள் வாரியாக சென்று தேர்தல் பணி ஆற்ற உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், மாநாடு, பொதுக்குழு உள்ளிட்ட கூட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. இதற்கு அடுத்த கட்டமாக, தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்த அறிவிப்பு உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்து விட்டன. இதே போல, தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவை விஜய் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார குழுவை விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10 பேர் கொண்ட குழுவை இறக்கிய விஜய்
தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம், மாவட்டம், தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தவெக பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன், ஏ. பார்த்திபன், பி. ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




மேலும் படிக்க: 30 நாட்களில் கூட்டணி குறித்த நல்ல செய்தி வரும்.. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு!
234 தொகுதிகள் வாரியாக ஆலோசனை கூட்டங்கள்
இதே போல, கே. வி. விஜய் தாமு, எஸ். பி. செல்வம், கே. பிச்சை ரத்தினம் கரிகாலன், எம். செரவு மைதீன் என்ற நியாஸ், ஜே. கேத்தரின் பாண்டியன் ஆகிய 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சாரக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சென்று அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்காக பிரச்சாரம் மேற்கொள்வார்கள். மேலும், இந்த குழு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரச்சார கூட்டங்கள் உள்ளேற்றவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதுடன் ஆலோசனை செய்யும்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை
— TVK Vijay (@TVKVijayHQ) January 16, 2026
தவெக தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவே, தொகுதிகள் வாரியாக செல்லும் இந்த குழுவுக்கு தமிழக வெற்றிக்கழக கட்சியின் தொண்டர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. இதில், கட்சி மற்றும் கட்சியின் தலைவர் விஜய்க்கு சில இடையூறுகள் வந்தாலும் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: திருவள்ளுவர் தினம்.. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 முக்கிய வாக்குறுதிகள்!!