30 நாட்களில் கூட்டணி குறித்த நல்ல செய்தி வரும்.. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு!
O Panneerselvam On 2026 Election Alliance | 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி குறித்த எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், 30 நாட்களுக்குள் கூட்டணி குறித்த நல்ல செய்தி வரும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தேனி, ஜனவரி 16 : தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. கட்சிகள் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், அடுத்த 30 நாட்களில் கூட்டணி குறித்த நல்ல முடிவு வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (O. Panneerselvam) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூட்டணி குறித்து 30 நாட்களில் தெரிய வரும் – ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட கூட்டணிகளை உறுதி செய்வது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் பிரசாரம் என அடுத்தடுத்து கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களது கூட்டணியில் ஏதேனும் மாற்றம் செய்ய உள்ளனவா அல்லது புதிய கூட்டணி எதுவும் உருவாக உள்ளதா என்பது குறித்த எதிர்ப்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி குறித்து 30 நாட்களில் தெரிய வரும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நிவாரணம் அறிவிப்பு… விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் – ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (ஜனவரி 15, 2026) தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தை பிறந்தால் வழி பிறக்கும். இன்று தான் தை பிறந்துள்ளது. தை மாதத்தில் 30 நாட்கள் உள்ளன. அந்த 30 நாட்களில் கூட்டணி குறித்த நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதலிடம் பிடித்த வீரர் யார்? என்ன பரிசு?
பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.