அரியலூர், மார்ச் 21 : அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுளியம் என்ற கிராமத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம், அந்த பகுதி மக்களிடையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த 55 வயதான ராமதாஸ் என்ற நபரின் இறுதிச்சடங்கு கடந்த மார்ச் 19, 2026 அன்று இரவு அக்கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. அந்த இறுதிச்சடங்கில் அக்கிராம மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அடுத்த நாள் மார்ச் 20, 2026 அன்று காலை, மறைந்த ராமதாஸின் உறவினர் ஒருவர் மயானம் அருகே சென்றபோது, சிதையில் எரிக்கப்பட்ட உடல் முழுமையாக எரியாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, இறுதிசடங்கு மேற்கொண்டவர்களில் ஒருவரான சக்திவேல் என்பவரை அழைத்து இதுகுறித்து விளக்கம் கேட்டார். இந்த நிலையில் இரவு மழை பெய்த காரணத்தால், சிதை முழுமையாக எரியாமல் இருந்திருக்கலாம் என சந்தேகித்த அவர்கள், மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றி சிதையை முழுமையாக எரித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… தொழிலாளர் நல தீர்ப்பாயம் ஆணை..!
மதுபோதையில் எரியும் சிதையில் விழந்த நபர்?
இந்த நிலையில் தான், ராமதாஸின் இறுதிசடங்கில் பங்கேற்ற ராமதாஸின் உறவினர் தங்கராசு என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து தங்கராசுவை கிராமம் முழுவதும் தேடியிருக்கின்றனர். இதற்கிடையில் சந்தேகமடைந்த கிராமத்தினர் , சிதை முழுவதும் எரிந்த பின் சாம்பலை சோதித்தபோது, அதில் 2 மண்டை ஓடுகள் மற்றும் அதிக எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த ராமதாஸின் இறுதி சடங்கின் நடைபெற்ற போது தங்கராசு மதுபோதையில் இருந்திருக்கிறார். மேலும் அவர் அங்கும் இங்கும் அலைந்தபடியே இருந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் எரியும் சிதையில் தங்கராசு தவறி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு – ஒரு லிட்டர் பாட்டில் விலை இவ்வளவா?
இந்த சம்பவம் குமுளியம் கிராமம் மட்டுமல்லாமல் அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பரவியது. இந்த சம்பவம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிராம மக்களிடையே தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மர்ம சம்பவம் தொடர்பாக உண்மை நிலை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மதுவால் பல்வேறு இடங்களில் விசித்திரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மதுபோதையில் எரியும் சிதையில் விழுந்து உயிரிழந்த முதியவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.