மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்.. போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம்..
Vilathikulam Case: இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி 14 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
மார்ச் 21, 2026: மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் காவல்துறை விசாரணையில் பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, காலை கழிப்பதற்காக சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நடந்தது என்ன?
தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, அவர்மீது 32 திருட்டு மற்றும் நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
மேலும் படிக்க: பறவை காய்ச்சல் பாதிப்பு.. பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
இந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் அவர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியபோது, சம்பவம் நடந்த நாள் காட்டுப் பகுதியில் இருந்ததாகவும், அந்த மாணவி அந்த வழியாக சென்றபோது சபலம் ஏற்பட்டதால் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
தர்ம முனீஸ்வரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்:
அப்போது மாணவி கத்தி கூச்சலிட்டதால், தனது காலால் கழுத்தை நெரித்ததாகவும், அக்கம் பக்கத்தினர் அறிந்து விடக்கூடாது என்பதற்காக துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்து கொண்டு, அடுத்த நாள் காலை அங்கிருந்து வாகனத்தில் தூத்துக்குடிக்கு தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி 14 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
நெல்லை டிஐஜி சொன்ன தகவல்:
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை டிஐஜி தெரிவித்ததாவது, கைதான தர்ம முனீஸ்வரன் சம்பவத்திற்கு முன் 3 நாட்கள் காட்டுப் பகுதியில் இருந்து பெண்களை கவனித்து வந்துள்ளார். பாலியல் குற்றம் செய்ய திட்டமிட்டிருந்தாலும், அது நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
அந்த நாட்களில், திருட்டு மோட்டார் சைக்கிளில் அங்கு நீண்ட நேரம் இருந்ததால், உள்ளூர் நபர் சோலையப்பன் சந்தேகப்பட்டு அவரது புகைப்படத்தை எடுத்துள்ளார். பின்னர் மாணவி கொலை வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சோலையப்பன் தானாக முன்வந்து அந்த புகைப்படத்தை வழங்கினார். அதுவே இந்த வழக்கில் முக்கிய சான்றாக அமைந்தது.
மேலும் விசாரணையில், இந்த குற்றத்தில் தர்ம முனீஸ்வரன் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.