DMK: விஜய் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு தடையா?
DMK vs TVK: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக அமைச்சர்கள் விஜய்யைப் பற்றி பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், திமுகவினரை நேரடியாக விமர்சித்த நிலையில் இந்த தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ்நாடு, செப்டம்பர் 23: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு திமுக தலைமை அமைச்சர் உட்பட இரண்டாம் நிலை தலைவர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பொது கூட்டங்களின் போது நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை பற்றி அமைச்சர்கள் மறைமுகமாகவே கருத்து தெரிவித்தனர். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர். காந்தி தமிழக வெற்றிக் கழகம் பெயரை குறிப்பிடாமல் அவர்களைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் பதிலளிக்க அனுமதி இல்லை என வெளிப்படையாகவே தெரிவித்தார். இது வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தடை உத்தரவு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஊடகவியலாளர்கள் தரப்பில் கேள்வியெழுப்பியபோது,”மாநில திமுக அரசின் சாதனைகள் மற்றும் மத்திய அரசால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விளக்குவதில் எங்கள் கவனம் இருந்தது. மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவது கவனச்சிதறலாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்” என கூறியுள்ளார்.
Also Read: திமுகவிற்கு விஜய் மூலம் பாஜக இடையூறு.. அப்பாவு பரபரப்பு!
திமுக vs தவெக மோதல்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டம் அல்லது தொகுதி வாரியாக முதற்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புதிதாக களம் கண்டுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரது சுற்றுப்பயணம் டிசம்பர் 20ஆம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட விஜய் தனது உரையில் நேரடியாகவே முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்தார்.
Also Read: TVK Vijay: திருச்சி என்றாலே திருப்புமுனைதான் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்..
மேலும் திருவாரூருக்கு சென்ற அவர் அங்கு கடுமையாக திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும், அமைச்சர் டிஆர்பி ராஜாவையும் பற்றி பேசினார். இதனால் விஜயின் பேச்சு அரசியல் தாண்டி பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியது. இப்படியான நிலையில் தான் விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு போட்டியாக திமுகவால் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுதிமொழி பொதுக்கூட்டம் திமுகவால் நடைபெற்று அதில் பெருந்திரளாக திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் நடிகராக இருந்து அரசியலில் களம் கண்டுள்ளதால் பேசுபொருளாக உள்ளார். அப்படியிருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசினால் எதிர்மறை கருத்துகளும், எண்ணங்களும் மக்களிடத்தில் உருவாக வாய்ப்புள்ளது. எனவே நாம் செய்த, செய்து கொண்டிருக்கும் சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடத்தில் வாக்கு சேகரியுங்கள் என தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.