“ஆட்சியை கவிழ்க்க திமுக தீவிர முயற்சி!”.. மு.க.ஸ்டாலின் மீது சிபிஎம் சண்முகம் சரமாரி குற்றச்சாட்டு!!
"சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே விரும்பி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது தமிழக அரசியலில் சகஜமான ஒன்றுதான். ஆனால், இப்படி கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து, பேரம் பேசி ஒருவரை வாங்குவது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத, மோசமான ஒரு விஷயமாகும்" என்று சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.
சென்னை, ஜூலை 02: தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள பரபரப்பான புகார் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது தற்போதைய (தவெக) ஆட்சியை கவிழ்த்துவிட்டு, மீண்டும் தாங்களே ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க: ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது FIR பதிவு.. வெளியான ஷாக் விவரங்கள்!!
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு விவாதம்:
சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘விரைவில் தேர்தல் வரும், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று குறிப்பிட்டிருந்ததை சண்முகம் சுட்டிக்காட்டினார். “அவர் அன்று பேசியதன் பின்னணி என்ன என்பது இப்போதுதான் புரிகிறது. தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான தீவிரமான முயற்சியில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான், தற்போது தவெக சட்டமன்ற உறுப்பினரை கோடிக்கணக்கில் விலை பேச முயன்ற விவகாரம்” என்று அவர் விமர்சித்தார்.
35 கோடி ரூபாய் பேரம் – 9 பேர் கைது:
தவெக சட்டமன்ற உறுப்பினரை ரூ.35 கோடிக்கு விலை பேச முயன்றதாக இதுவரை 9 பேர் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகத் தாக்குதல் தொடுத்துள்ளது.
சுயவிருப்பத்துடன் மாறுவது வேறு, விலை பேசுவது வேறு:
“சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்களாகவே விரும்பி ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது தமிழக அரசியலில் சகஜமான ஒன்றுதான். ஆனால், இப்படி கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து, பேரம் பேசி ஒருவரை வாங்குவது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத, மோசமான ஒரு விஷயமாகும்” என்று சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பின்னடைவு.. சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
மேலும், இந்த குதிரைபேர விவகாரத்தில் பின்னணியில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு முறையான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தவெக எம்.எல்.ஏ விலை பேசப்பட்ட விவகாரத்தில் சிபிஎம் கட்சியின் இந்த நேரடிக் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.