“ஒரே அணியில் திமுக – தவெக”..? திருமாவளவன் வகுத்த வியூகம்.. மாணிக்கம் தாகூர் கொடுத்த புதிய விளக்கம்!!
இதற்கிடையே, "பாஜகவை எதிர்க்க திமுக - தவெக ஒரே அணியில் இணைய வேண்டும்" என்ற விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இது கேரளா மாடலை முன்வைத்த ஒரு தொலைநோக்கு அரசியல் பார்வை என்று விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, ஜூலை 11: தமிழ்நாடு அரசியலில் அண்மைக் காலமாகப் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய இரு கட்சிகளும் ஒரே அணியில் வருவது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, பாசிச மற்றும் பாஜக ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் தவெக-வும் திமுக-வும் ஒரே அணியில் திரள வேண்டும் என்றும், அந்த எதிர்ப்பு கொள்கையில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் கருத்துத் தெரிவித்து அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமாவளவனின் இந்த நிலைப்பாடு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விரிவான விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: “புது அவதாரம் எடுத்த அண்ணாமலை!”.. பொள்ளாச்சியில் நாளை கூடும் “வி த லீடர்ஸ்” முதல் பிரம்மாண்ட மாநாடு!!
திருமாவளவனின் தொலைநோக்கு அரசியல் பார்வை:
மாணிக்கம் தாகூர் பேசுகையில், “அண்ணன் திருமாவளவன் அவர்களின் பார்வை என்பது மிகவும் தொலைநோக்குடையது. அவர் முன்வைக்கும் அரசியலை நாம் மிக ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை இன்றைய தற்கால அரசியல் சூழலோடு அல்லது தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு மட்டும் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது” என்று குறிப்பிட்டார். தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கியே திருமாவளவன் அவர்களின் கருத்து அமைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதிக்கம் இல்லாத ஒரு முற்போக்கு அரசியல் சூழல் தொடர வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடே இது என்றும் அவர் விவரித்தார்.
கேரளா அரசியல் மாடல் – ஒரு முக்கிய உதாரணம்:
திருமாவளவனின் இந்த வியூகத்தை விளக்குவதற்காக அண்டை மாநிலமான கேரளாவின் அரசியல் சூழலை மாணிக்கம் தாகூர் முன்மாதிரியாகக் குறிப்பிட்டார். “கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் மாநில அளவில் நேர் எதிரெதிரான கொள்கைகளைக் கொண்டு கடுமையாக மோதிக்கொள்கின்றன. ஆனால், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று வரும்போது, டெல்லியில் இரு கட்சிகளும் முதிர்ச்சியோடு ஒரே மேஜையில் அமர்ந்து கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
அதேபோன்ற ஒரு முதிcர்ச்சியான அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும் என்றும், பாஜகவை எதிர்ப்பதில் இரு கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட வேறுபாடுகளைக் கடந்து, கொள்கை அளவில் உறுதியாக நிற்கத் தயாராக வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்துவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க: அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்:
இறுதியாக, செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அரசியல் தலைவர்களின் கருத்துகளை ஊடகங்கள் கட்-பேஸ்ட் செய்து அல்லது எடிட் செய்து தவறான அர்த்தம் வரும்படி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்கள் கூற வரும் உண்மையான ஆழமான கருத்துகளின் அர்த்தமே முற்றிலும் மாறிவிடுகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.