முதல்வர் விஜய்யின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான்.. இன்னும் சினிமா சூட்டிங் போலவே நடந்துக்கொள்கிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்..
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல, அரசுப் பணியை வழங்கியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில்தான் முதலமைச்சரின் செயல்பாடுகள் உள்ளன. அதேபோல், ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பதாக முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்" என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஜூலை 11, 2026: முதலமைச்சர் விஜய் கரூர் மாவட்டத்தில் பேசியது வழக்கமான ஸ்கிரிப்ட்தான் என்றும், அதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரைச் சேர்ந்த 32 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கடுமையாக விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் விஜய்:
அதேபோல், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, “கரூர் கம்பெனி ஓனர் ஓடிக்கொண்டே இருக்கிறார்” என்று கூறியதுடன், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘புலி உறுமுது’ பாடலைப் பாடியும் விமர்சித்தார்.
முதல்வரின் வழக்கமான ஸ்கிரிப்ட் தான்:
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியது வழக்கமான ஸ்கிரிப்ட்தான். அவர் இன்னும் சினிமா ஷூட்டிங்கில் இருப்பதைப் போலவே செயல்பட்டு வருகிறார்.
மேலும் படிக்க: “புது அவதாரம் எடுத்த அண்ணாமலை!”.. பொள்ளாச்சியில் நாளை கூடும் “வி த லீடர்ஸ்” முதல் பிரம்மாண்ட மாநாடு!!
ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்குவோம் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்காத நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் ஏன் பேசவில்லை?
எம்.ஜி.ஆர் வேறு விஜய் வேறு – ஜெயகுமார்:
மக்களுக்காக தனது சொந்த பணத்தை வழங்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகுதான் அதைச் செய்தார். விஜய் இடைத்தேர்தலை மனதில் வைத்துத்தான் தற்போது பேசி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய், தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயையாவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியிருக்கலாமே? அந்தப் பணம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியிருக்கும்.
மேலும் படிக்க: அமித்ஷா எனக்கு போன் செய்தார், ஏன் தெரியுமா?”.. அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே திருமாவளவன் ஓப்பன் டாக்!!
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல, அரசுப் பணியை வழங்கியுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில்தான் முதலமைச்சரின் செயல்பாடுகள் உள்ளன. அதேபோல், ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பதாக முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்” என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.