AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு நிகழ்ச்சிகளில் “வந்தே மாதரம்” பாடலுக்கு முதலிடம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!!

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், மாநிலப் பாடல்களுக்கு முன்னதாகவே தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளிலும் இப்பாடலை பாட தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் “வந்தே மாதரம்” பாடலுக்கு முதலிடம்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!!
அரசு நிகழ்ச்சிகளில் "வந்தே மாதரம்" பாடலுக்கு முதலிடம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Jul 2026 12:59 PM IST

டெல்லி, ஜூலை 11: அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் இசைப்பது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் மிக முக்கியமான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மத்திய அரசு அனுப்பியுள்ள வழிகாட்டுதலின்படி, மாநிலங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் அனைத்து விதமான அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கட்டாயமாக ஒலிக்கப்பட வேண்டும். அதோடு, அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ ஆகிய இரண்டும் இசைக்கப்படும் போது அவற்றுக்கான வரிசைமுறை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்.. எடுத்துச்சென்ற மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆட்சியர் எச்சரிக்கை…

வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை:

அதன்படி, நிகழ்ச்சிகளில் முதலில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ தான் முதலிடத்தில் பாடப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய விதிமுறை அல்ல என்றும், ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாகவும் கட்டாயமாகவும் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலப் பாடல் வரிசையில் தொடரும் குழப்பம்:

பல்வேறு மாநிலங்களில் அரசு நிகழ்ச்சிகளின் போது தேசியக் கீதத்துடன் சேர்த்து அந்தந்த மாநிலத்தின் மாநிலப் பாடல்களும் (உதாரணமாகத் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து) பாடப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாநிலப் பாடல் பாடப்படும் போதும், தேசியப் பாடலும் தேசியக் கீதமும் ஒன்றாகவே அடுத்தடுத்து இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும், மத்திய அரசின் இந்த புதிய உத்தரவிலும் ஒரு முக்கியக் குழப்பம் நீடிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது, மாநிலப் பாடலோடு சேர்த்து இவை இரண்டும் பாடப்படும் போது, முதலில் மாநிலப் பாடலை பாடிவிட்டு அதன் பிறகு தேசியப் பாடல், தேசியக் கீதத்தை பாட வேண்டுமா? அல்லது தேசியப் பாடல் மற்றும் தேசியக் கீதத்தை முதலில் பாடிவிட்டு மூன்றாவதாக மாநிலப் பாடலைப் பாட வேண்டுமா? என்பதில் தெளிவான வரையறை இல்லை.

தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலிடத்திலும், நிகழ்ச்சியின் முடிவில் தேசியக் கீதம் இறுதியிலும் பாடப்படுவது மரபாக உள்ளது. ஆனால், சமீபகாலமாகத் தமிழகத்தில் நடந்த சில ஆளுநர் நிகழ்ச்சிகள் மற்றும் பதவிப் பிரமாண விழாக்களில், தேசியப் பாடலான வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டு, மாநிலப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தமிழக அரசு தனது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தது. இந்தச் சூழலில் மத்திய அரசின் தற்போதைய உத்தரவு, மாநிலப் பாடலின் முன்னுரிமை குறித்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனிஸ்கிரீன்ஷாட், வாட்ஸ்அப் டிக்கெட் செல்லாது – புதிய விதிகள் சொல்வது என்ன?

“உச்சரிப்பில் தவறு இருக்கக்கூடாது”:

அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலும், தேசியக் கீதமும் இசைக்கப்படும் போது அல்லது பாடப்படும் போது, அதன் உச்சரிப்பில் எந்தவிதமான பிழையோ அல்லது தவறோ இருக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மாத்திரை அளவு மற்றும் இசையமைப்புடன், துல்லியமான உச்சரிப்போடு மட்டுமே இவை பாடப்பட வேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஸ்ட்ரிக்டாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us