AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி தரமான அரிசி மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..

மேம்படுத்தப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் அரிசி கொள்முதல் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும், 2027–28 கரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் இந்த புதிய நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், உடைந்த அரிசியை தனியாகக் கொண்டு செல்லாமல், அரிசி ஆலைகளிலிருந்தே நேரடியாக ஏலம் விடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதால் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கையாளுதல் செலவுகள் குறையும்.

இனி தரமான அரிசி மட்டுமே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் – மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Jul 2026 11:34 AM IST

ஜூலை 10, 2026: நாடு முழுவதும் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் (ரேஷன்) மூலம் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்தும் முக்கிய முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இதன்படி, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசியில் உடைந்த அரிசியின் அளவை கணிசமாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனது சமூக வலைதளப் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நாட்டின் உணவுப் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரம் மேம்படுத்த நடவடிக்கை:

புதிய விதிமுறையின்படி, பச்சை அரிசியில் அனுமதிக்கப்படும் உடைந்த அரிசியின் அளவு 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசியின் அளவு 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் தரநிலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார். இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு உயர்தரமான உணவு தானியங்கள் வழங்கப்படுவதுடன், அவர்களின் உணவுப் பாதுகாப்பும் மேலும் உறுதி செய்யப்படும் என்றார்.

மேலும், தகுதியுடைய அனைத்து குடும்பங்களும் இதுவரை பெற்றுவந்த அதே அளவிலான இலவச உணவு தானியங்களை தொடர்ந்து பெறுவார்கள். ஆனால், இனி வழங்கப்படும் அரிசியின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்தர அரிசி வழங்கப்படும்:

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு அரிசி மணியும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் உயர்தர அரிசி மட்டுமே விநியோகிக்கப்படும் நிலையில், பிரித்தெடுக்கப்படும் உடைந்த அரிசி எத்தனால் உற்பத்தி, கால்நடை தீவனம், உணவுப் பதப்படுத்தும் தொழில், மதுபான உற்பத்தி உள்ளிட்ட தொழில்துறை தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனிஸ்கிரீன்ஷாட், வாட்ஸ்அப் டிக்கெட் செல்லாது – புதிய விதிகள் சொல்வது என்ன?

மேம்படுத்தப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் அரிசி கொள்முதல் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும், 2027–28 கரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் இந்த புதிய நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உடைந்த அரிசியை தனியாகக் கொண்டு செல்லாமல், அரிசி ஆலைகளிலிருந்தே நேரடியாக ஏலம் விடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதால் போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கையாளுதல் செலவுகள் குறையும். சணல் மூட்டைகளுக்கு பதிலாக எச்.டி.பி.இ. (HDPE) பைகள் பயன்படுத்தப்படுவதால் பேக்கேஜிங் செலவும் குறையும்.

ரூ.2,161 கோடி வரை செலவு மிச்சமாகும்:

இந்த மாற்றங்களின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.2,161 கோடி வரை அரசுக்கு செலவு மிச்சமாகும் என்றும், உடைந்த அரிசி விற்பனை மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், உணவு மானியச் சுமையும் குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஏற்கனவே ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு, உயர்தர அரிசியை பெரிய அளவில் உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு மாதம் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்ட பயனாளிகளுக்கு குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us