தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் சிகிச்சை..
அப்போது சத்யபாமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு, தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 24, 2026: தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாராபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்:
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இரு தொகுதிகளிலும் நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோவையில் கொடூரம்.. 2 சவரன் நகைக்காக பட்டப்பகலில் பெண் கொலை.. உடைந்த வளையலால் சிக்கிய கொலையாளி..
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சத்யபாமாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு:
இந்த நிலையில், தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, தவெகவின் தேர்தல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சத்யபாமாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு, தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. அரசாணையை ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவு?
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான வழக்குகளில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.