‘உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்’ – ஒரு அழைப்பில் ரூ.10 லட்சம் பறித்த சைபர் கும்பல்
Cyber Fraud: மும்பை போலீஸ் என கூறிய மர்மநபர் ‘டிஜிட்டல் கைது’ என்று மிரட்டி மோசடி செய்தார். வேலூர் ஓய்வுபெற்ற ஆசிரியை பல தவணைகளில் ரூ.10 லட்சம் அனுப்பினார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
வேலூரில் 77 வயது ஓய்வுபெற்ற ஆசிரியை சைபர் மோசடிக்கு இரையாகினார். மர்மநபர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என கூறி தொடர்பு கொண்டார். ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி வங்கி விவரங்களை பெற்றார்.
நிதி பரிவர்த்தனை சரிபார்ப்பு என்ற பெயரில் பணம் கேட்கப்பட்டது. ஆசிரியை பல தவணைகளில் ரூ.10 லட்சம் அனுப்பினார். சம்பவம் குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீஸ் என கூறிய மர்மநபர் ‘டிஜிட்டல் கைது’ என்று மிரட்டி மோசடி செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அறியா அழைப்பால் தொடங்கிய மோசடி
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரை சேர்ந்த 77 வயதுடைய ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் சைபர் மோசடியின் மூலம் ரூ.10 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 2026 ஜனவரி 16-ஆம் தேதி மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, மிகவும் நம்பகமான முறையில் பேசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
Also Read: திருச்சியில் மாணவர்களிடயே மோதல்.. 13 வயது சிறுவன் பலி – பரபரப்பு சம்பவம்
‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் மிரட்டல்
அந்த நபர் தொடர்ந்து பேசியபோது, “உங்களுக்கு தீவிரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உங்கள் ஆதார் மற்றும் செல்போன் எண் எங்களிடம் உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம்” என்று கூறி பயமுறுத்தியுள்ளார். மேலும், விசாரணை நடவடிக்கைக்காக அவருடைய நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்காக வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வங்கி விவரங்களை பெற்ற பிறகு மோசடி
அந்த நபரின் பேச்சை உண்மையாக நம்பிய ஓய்வுபெற்ற ஆசிரியை, தனது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அவரிடம் பகிர்ந்துள்ளார். பின்னர் அவர், “உங்களது பணப் பரிவர்த்தனைகளில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை சரிபார்க்க நாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும். சரிபார்த்த பிறகு அந்த பணத்தை மீண்டும் உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பிவிடுவோம்” என்று கூறியுள்ளார்.
பல தவணைகளில் ரூ.10 லட்சம் அனுப்பிய ஆசிரியை
இதனை நம்பிய ஆசிரியை, அந்த நபர் கூறியபடி பல தவணைகளில் மொத்தம் ரூ.10 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு அந்த மர்மநபர் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் பின்னர் உணர்ந்தார்.
சைபர் கிரைம் போலீசில் புகார்
இதையடுத்து ஓய்வுபெற்ற ஆசிரியை வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்நியர்களுக்கு வங்கி விவரங்கள் அல்லது பணம் வழங்கக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.