சென்னை, பிப்ரவரி 18, 2026: திமுக–காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது; அப்படி தெரிவித்தால் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தினசரி பொதுக்குழு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், திமுக கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு:
குறிப்பாக 2006ஆம் ஆண்டு முதல் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தரப்பில் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் படிக்க: தமிழக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்…3 நாளுக்கான நிகழ்ச்சி நிரல்!
ஆட்சியில் பங்கு – வலியுறுத்தும் காங்கிரஸ்:
இத்தகைய சூழலில், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், இதுகுறித்த கருத்துகள் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே வந்தன. அதே சமயம், ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூருக்கு சென்று, இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை:
இந்த நிலையில், நேற்றைய தினம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வருகை தந்தார். நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, எந்த காங்கிரஸ் கட்சியினருக்கும் பொதுவெளியில் திமுக–காங்கிரஸ் கூட்டணி குறித்து விமர்சிக்க அல்லது கருத்து தெரிவிக்க உரிமை இல்லை; அதுகுறித்து பேச அதிகாரம் டெல்லி தலைமையிடம் மட்டுமே உள்ளது என அவர் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: புதிய கட்சியைத் தொடங்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் – என்ன பெயர் தெரியுமா?
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.சி. வேணுகோபால், “திமுக எங்களின் பழைய கூட்டாளி. காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிப்பது அவர்களது சொந்த கருத்து; அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. கூட்டணி மற்றும் ஆட்சிப் பங்கு குறித்த தெளிவான, தீர்மானமான பேச்சுவார்த்தை அவசியம். கூட்டணி குறித்து யாரேனும் கருத்து தெரிவித்தால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.சி வேணுகோபால்:
நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததுபோல, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களின் கூட்டணி தொடரும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. திமுகவுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்போம். பேச்சுவார்த்தைக்காக திமுக அழைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். திமுக–காங்கிரஸ் கூட்டணி குறித்து இனி யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது” என தெரிவித்தார்.