முதலமைச்சர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டதாக நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
ஜோதிடர் நியமனத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு:
தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், இரண்டாவது நாளிலேயே முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராஜன் பண்டிட் வெற்றிவேல் சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. “ஜோதிடருக்கு எதற்கு அரசு பதவி?” என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், “ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார்?” என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபை நிகழ்வின் போது இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஜோதிடருக்கு எதற்கு அரசு பணி? இதன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
வாபஸ் பெறப்பட்ட நியமன ஆணை:
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த நியமனத்தை திரும்பப் பெற்றுள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் இந்த நியமன உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
முதலமைச்சரின் இந்த செயல்பாட்டை அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அதாவது, பிற கட்சிகளின் விமர்சனங்களை ஏற்று திருத்தம் செய்யும் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், எதிர்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் முதலமைச்சராக விஜய் இருந்து வருகிறார் என்றும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ரிக்கி ராஜன் பண்டிட் வெற்றிவேல் என்பவர் ஈரோட்டில் பிறந்தவர். ஜோதிடராக பணியாற்றி வந்த அவர், வேத ஜோதிடம், தியானம் சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் எண் கணிதம் ஆகியவற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மேலும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் ஜோதிட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.