AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு.. தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?”.. முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரங்கள்!!

CM Medical Insurance Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ. 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்குகிறது இந்தச் செய்திக் கட்டுரை. மேலும், வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் இதில் அலசப்பட்டுள்ளது.

“ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு.. தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?”.. முதல்வர் விஜய் அறிவிப்பின் முழு விவரங்கள்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 06:47 AM IST

சென்னை, ஆகஸ்ட் 25: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், ஏழை எளிய மக்களின் நலன் கருதி மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (CMCHIS) வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய நிதிநிலையில் சிகிச்சைக் கட்டண உயர்வுக்கு ஏற்பக் காப்பீட்டுத் தொகை பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே… 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

காப்பீட்டில் சிகிச்சை பெற தகுதிகள் நிர்ணயம்:

இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சையைப் பெற சில முக்கியத் தகுதிகளும் சான்றிதழ்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, பயன்பெற விரும்பும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1,20,000க்குள் இருக்க வேண்டும். இதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகிய ஆவணங்கள் அவசியமாகும். இத்தகுதிகளை நிறைவு செய்யும் பயனாளிகள், தங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிரத்யேக மருத்துவக் காப்பீட்டு மையத்திற்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பித்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பிற்குப் பின் புதிய காப்பீட்டு அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ரொக்கமில்லா சிகிச்சை பெறலாம்:

காப்பீட்டு அட்டையைப் பெறும் குடும்பத் தலைவரின் மனைவி, பெற்றோர் மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இத்திட்டத்தின் மூலம் பலனடையலாம். ஆனால், பயனாளிகளின் பெயர்கள் கட்டாயமாகக் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும்; பெயர் விடுபட்டிருந்தால் அவர்களால் இச்சிகிச்சைப் பலன்களைப் பெற முடியாது. மேலும், இக்காப்பீட்டைப் பயன்படுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குக் காப்பீட்டு அடிப்படையில் ரொக்கமில்லா சிகிச்சை பெறலாம். பயனாளிகள் தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை முறைகளின் விவரங்களைச் CMCHIS Official Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

தகவல்களுக்கு இலவச உதவி எண்:

சிகிச்சை பெறச் செல்லும் போது மருத்துவமனையிலுள்ள காப்பீட்டுப் பிரிவை அணுகி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான மேலதிக சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு அரசு அமைத்துள்ள 24 மணி நேர இலவச உதவி எண்ணான 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

இதையும் படிக்க: உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!

வருமான வரம்பை உயர்த்தக் கோரிக்கை:

அதேவேளையில், இத்திட்டம் குறித்துப் பொதுமக்கள் சில முக்கியமான கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். தற்போதைய சூழலில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 1,20,000 (மாதம் ரூ. 10,000) எனக் நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகவும் குறைவாக உள்ளதால், நடுத்தரக் குடும்பங்களும் பயனடையும் வகையில் இந்த வருமான வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காப்பீட்டுத் தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்தியது பாராட்டுக்குரியது என்றாலும், வருமான வரம்பையும் தளர்த்தினால் மட்டுமே கூடுதல் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் பலன் முழுமையாகச் சென்றடையும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Follow Us