இந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை.. நான் தான்.. மலேசியாவை சேர்ந்த பெண் பரபரப்பு வீடியோ!
Minister Keerthana Viral Video : தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆன நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் மலேசியா நாட்டை சேர்ந்த வினோஷா என்ற பெண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், என்ன தெரிவித்துள்ளார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கருப்பு நிற மார்டன் உடையில் காரில் இருந்து இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வந்தன. இந்த வீடியோ தொடர்பாக, அமைச்சர் கீர்த்தனாவும் விளக்கம் அளித்து இருந்தார். அந்த வீடியோவில் வருவது நான் இல்லை. திட்டமிட்டு இந்த வீடியோவை சிலர் பரப்பி உள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த வீடியோவில் இருக்கும் அந்த பெண் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது பெயர் வினோஷா எனவும், தான் மலேசியாவில் சேர்ந்தவர் எனவும் அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வரும் வீடியோ தொடர்பாக மலேசியா போலீசில் புகார் அளித்துள்ளேன்.
இந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்
இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். அந்த வீடியோவில் என்ன தவறாக இருந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் எனது காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இந்தியாவில் இருக்கும் ஒரு பெண் அமைச்சரை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் இது போன்ற உடை அணியலாமா என்ற நோக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!
அந்த வீடியோவில் இருப்பது நான் தான்- அமைச்சர் இல்லை
அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான்தான். அவர் அந்த பெண் அமைச்சர் இல்லை. இந்த வீடியோவில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த வீடியோ வைரல் ஆவதால் என்ன ஆகப் போகிறதோ என்று அச்சமடைந்தேன். இதை பார்த்த எனது நலம் விரும்பிகள் உனது தவறு எதுவும் இல்லை என்று கூறினர். அந்த வீடியோவில் ஆபாசமாக உடை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நான் அப்படி என்ன உடை அணிந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்த உடை அணிந்ததால் தான் எதிராக கருத்து தெரிவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டாம்.
அமைச்சர் கீர்த்தனா வீடியோ என்று இன்னொரு பொண்ணோட Personal ah வெளியிட்ட கொத்தூஸ் 🤡🤡
அந்த வீடியோவில் இருக்கும் பெண் போலீஸில் புகார் 🔥🔥 pic.twitter.com/KWGD32Ji03
— Vijay Venkat – TN 69 (@VijayVenkat1235) August 24, 2026
அமைச்சரையும், என்னையும் குறி வைத்து பேசுவதை நிறுத்தவும்
இந்த வீடியோ என்னை குறிப்பிட்டு பதிவு செய்தது கிடையாது. எனவே, என்னை குறிவைத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். இதே போல, அந்த பெண் அமைச்சரையும் விமர்சிப்பதை நிறுத்தி விடுங்கள். இந்த சம்பவத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன். இந்த வீடியோ மூலமாக சில விளக்கங்களை தெரிவிக்க விரும்பினேன் என்று அதில் அந்த பெண் பேசியுள்ளார். மேற்கண்ட விவரங்கள் அனைத்தையும் அவர் தமிழில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே… 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச டேப்லெட்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!