சென்னையில் இளம்பெண் கார் ஏற்றி கொலை.. பாரில் நடந்தது என்ன?.. இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!!
சண்டை தீவிரமானதால், பயந்துபோன அஷ்ரத் மற்றும் அவரது நண்பர், அந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றிப் பஸ் ஸ்டாண்டில் விடுவதற்காக ஒரே ஸ்கூட்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். நண்பர் வண்டி ஓட்ட, நடுவில் இரண்டு பெண்களை உட்கார வைத்துவிட்டு, அஷ்ரத் கடைசியில் உட்கார்ந்துள்ளார். ஒரே ஸ்கூட்டியில் 4 பேராக அவர்கள் கோயம்பேடு மேம்பாலம் கீழே தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
சென்னை, ஜுன் 1: சென்னை கோயம்பேடு வணிக வளாகப் பகுதியில் இளம்பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கொலை நடந்த போது ஸ்கூட்டியில் உடன் பயணித்து, தற்போது போலீஸ் காவலில் இருக்கும் ‘அஷ்ரத்’ (21) என்ற வாலிபர் சம்பவத்தின் போது நடந்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட ஜானு (19 வயது) மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு மைனர் பெண் (17 வயது) ஆகிய இருவரையும் இந்த வாலிபர்கள் அழைத்து வரவில்லை. அந்தப் பெண்களே ‘ராபிடோ’ (Rapido) பைக் மூலமாகத் தனியாகத்தான் அந்த ஹோட்டல் பாருக்கு வந்துள்ளனர். அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த அஷ்ரத் மற்றும் அவரது நண்பர்களிடம், பாருக்குள் செல்ல Pair Entry தேவைப்பட்டதால், இவர்களுடன் இணைந்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே செல்ல நுழைவு கட்டணம் எதையும் அந்தப் பெண்கள் செலுத்தவில்லை.
இதையும் படிக்க: மதுபான பாரில் ஏற்பட்ட தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் படுகொலை.. சென்னையில் பயங்கரம்..
பாரின் உள்ளே நடந்த அநாகரிகம்:
பாருக்குள் சென்ற பிறகு, ஜானு என்ற பெண் மது அருந்திவிட்டு போதையில் டான்ஸ் ஆடியுள்ளார். அப்போது அங்கிருந்த கும்பல், அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துக்கொண்டதுடன், தங்களது மேஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட அஷ்ரத்தை அந்த கும்பல் அடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பவுன்சர்களிடம் முறையிட்டபோது, “நீ வெளியே போய்ப் பார்த்துக்கொள், உள்ளே சண்டை போடாதே” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். தொடர்ந்து, பாருக்குள் தொடங்கிய சண்டை, பார் மூடப்பட்ட பிறகு வெளியே பெரும் கலவரமாக மாறியுள்ளது. அங்கிருந்த பிற பசங்களுக்கும், இந்த கும்பலுக்கும் இடையே பயங்கரக் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது காரின் கண்ணாடிகள் மற்றும் கார் மீது அங்கிருந்தவர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
ஒரு ஸ்கூட்டியில் 4 பேர் பயணம்:
சண்டை தீவிரமானதால், பயந்துபோன அஷ்ரத் மற்றும் அவரது நண்பர், அந்த இரண்டு பெண்களையும் காப்பாற்றிப் பஸ் ஸ்டாண்டில் விடுவதற்காக ஒரே ஸ்கூட்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். நண்பர் வண்டி ஓட்ட, நடுவில் இரண்டு பெண்களை உட்கார வைத்துவிட்டு, அஷ்ரத் கடைசியில் உட்கார்ந்துள்ளார். ஒரே ஸ்கூட்டியில் 4 பேராக அவர்கள் கோயம்பேடு மேம்பாலம் கீழே தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். தங்களது கார் தாக்கப்பட்ட ஆத்திரத்தில் இருந்த அந்தக் கும்பல் (சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர்), “இந்த சண்டைக்கு இந்த இரண்டு பெண்கள் தான் காரணம்” என்று தவறாக நினைத்துக் கொண்டு, கொலை வெறியுடன் காரை எடுத்துக்கொண்டு இவர்களது ஸ்கூட்டியைத் துரத்தியுள்ளது.
திட்டமிட்டு இரண்டு முறை மோதிய கொடூரம்:
வழக்கமாக விபத்து என்று கூறப்பட்ட இந்த சம்பவத்தில், கார் ஓட்டுநர் சுமன் சக்திவேல் திட்டமிட்டு ஸ்கூட்டியைத் துரத்தி வந்து முதல் முறை பின்னால் இடித்துள்ளார். ஆனால், ஸ்கூட்டியில் இருந்து கீழே விழாமல் அஷ்ரத்தின் நண்பர் பேலன்ஸ் செய்து நேராக தப்பிச் சென்றுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், காரை இன்னும் அதிவேகமாக முடுக்கி, இரண்டாவது முறையாக ஸ்கூட்டியின் மீது மிக வேகமாக மோதி ஏற்றியுள்ளார். இதில் ஸ்கூட்டியில் இருந்த 4 பேரும் வெவ்வேறு திசைகளில் தூக்கி வீசப்பட்டனர்.
இதையும் படிக்க: தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சுட்டுப்பிடிப்பு.. தென்காசி அருகே பரபரப்பு!!
விபத்தை ஏற்படுத்திய காரில் 6 பேர்:
இந்தக் கொடூர மோதலில், ஜானு என்ற பெண் தூக்கி வீசப்பட்டு, அங்கிருந்த பெரிய கல்லில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்றொரு பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். அஷ்ரத்தின் ஆடைகள் கிழிந்து, உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரில் மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர். அதில் வண்டியை ஓட்டி கொலை செய்த முக்கியக் குற்றவாளியான சுமன் சக்திவேல் என்பவரைத் தவிர, காரில் இருந்த மற்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.