சென்னையில் இன்று முதல் ‘ஸ்பாட் ஃபைன் – வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை
Vehicles Violating Rules : சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் சிறப்பு நடவடிக்கை அக்டோபர் 3, 2026 இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 3 : சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் சிறப்பு நடவடிக்கை அக்டோபர் 3, 2026 இன்று முதல் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த 10 நாட்களுக்கு நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் இன்று முதல் ஸ்பாட் ஃபைன்
சென்னையில் சாலை விபத்துகளையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து அதே இடத்தில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துமாறு சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க :“நடிப்புல சரோஜா தேவியவே மிஞ்சிட்டாங்க!”.. சத்யபாமாவை கலாய்த்து தள்ளிய சீமான்!




இந்த உத்தரவின்படி, சென்னையின் பிரதான சாலைகள், அதிக வாகன நெரிசல் உள்ள சந்திப்புகள், அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகள் ஆகியவற்றில் போக்குவரத்து போலீஸார் சிறப்புக் குழுக்களாகப் பிரிந்து வாகனச் சோதனையில் ஈடுபடவுள்ளனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், அல்லது விதிமுறைகளுக்கு மாறாக நம்பர் பிளேட் வடிவமைத்திருப்பர்கள், வித்தியாசமான எழுத்துகளில் நம்பர் பிளேட் பொறுத்திய வாகனங்கள் ஆகிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே பைக்கில் 3 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கார்களில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேகமாக வாகன ஓட்டுபவர்கள், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் நம்பர் பிளேட் இல்லாத அல்லது முறையற்ற நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களை, விபத்து அல்லது குற்றச் சம்பவங்களுக்குப் பிறகு அடையாளம் காண்பது காவல்துறைக்கு கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. சாலையோர கண்காணிப்பு கேமராக்களிலும் இது சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல், பைக்கில் மூன்று பேர் பயணிக்கும்போது வாகனத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு, ஓட்டுநரின் கட்டுப்பாடு குறைகிறது இதனால் நம்பர் பிளேட் இல்லாமல் அல்லது முறையற்ற முறையில் நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் மீது கடும் நடடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி – அண்ணாமலை அறிவிப்பு
அடுத்த 10 நாட்களுக்கு நகரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் நடைபெறவுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று, காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை உடன் வைத்திருப்பதும், போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் அபராதத்தைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், மற்ற பயணிகள் சாலையில் பாதுகாப்பாக செல்லவும் உதவும்.