தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு?.. என்ன சொல்கிறது வானிலை மையம்!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருசில இடங்கள், காரைக்காலில், இன்று காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த வாரம், தித்வா புயலின் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து. இது, வட மாவட்டங்களுங்கு தேவையான மழைப்பொழிவை தந்துச்சென்றுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். எனினும், அதன்பின் முழுக்க வறண்ட வானிலை மட்டும் தான் நிலவி வருகிறது.
6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 10) முதல் 6 நாட்களுக்கு அதாவது, வரும், 15ம் தேதி வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; நகரின் ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்று சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




குளிர்ந்த வெப்பநிலை நிலவும்:
அதேசமயம், அதிக அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குளிர்ந்த வெப்பநிலை காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஓசூர் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். மேலும், வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட நிலை இருந்தாலும் குளிர்ந்த வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளார்.