தமிழக மக்களுக்கு நற்செய்தி… விரைவில் அறிமுகமாகிறது பாரத் டாக்ஸி சேவை!
Bharat Taxi App: தமிழகத்தில் ஆட்டோர், கார் உள்ளிட்ட வாகனங்களில் குறைந்த விலையில் பயணிப்பதற்கான பாரத் டாக்ஸி செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாட்டில் பல்வேறு முக்கியமான பகுதிகளில் பொதுமக்கள் பயணம் செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் வாடகைக்கு இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த வாகனங்களில் பயணிக்கும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக, அந்த தனியார் நிறுவனங்கள் ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்து, அதில் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவு செய்து வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதில், கமிஷன்கள் மூலம் அந்த வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த நிறுவனங்களுக்கு நிலையான கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, முக்கிய நகரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களான காலை மற்றும் மாலையில் பீக் ஹவர்ஸ் நேரத்தில் அதிக அளவு கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன.
நாடு முழுவதும் பாரத் டாக்ஸி செயலி
சாதாரண நேரங்களில் அந்த செயலில் பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் வாடகை குறைந்த அளவே வசூலிக்கப்படும். இதன் காரணமாக அந்த வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில், அந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடும் நிலை உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே செயலியில் முன்பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதற்கு வசதியாக “பாரத் டாக்ஸி” என்ற செயலியை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது.
மேலும் படிக்க: விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..




தமிழகத்தில் அறிமுகமாகும் பாரத் டாக்ஸி செயலி
இந்த செயலியானது தற்போது புதுடெல்லி மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அதனை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்திலும் இந்த “பாரத் டாக்ஸி” செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரி ஒருவர் கூறுகையில், தனியார் செயலிகள் வாடகை வாகனங்களின் ஓட்டுனர்களிடம் இருந்து 30 சதவீத தொகையை கமிஷனாக பெற்று வருகிறது.
பொதுமக்கள்-ஓட்டுநர்களுக்கு பயனாக அமையும்
இந்த பாரத் டாக்ஸி செயலியில் ஓட்டுனர்களிடமிருந்து எந்த கமிஷனும் வசூலிக்கப்படாது. இதன் மூலம் முழு வருமானமும் ஓட்டுநர்களுக்கே கிடைக்கும். இதே போல, பொதுமக்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாரத் டாக்ஸி செயலியில் குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவை வழங்கப்படும். தமிழகத்தில் இந்த செயலியை அறிமுகம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ” பாரத் டாக்ஸி” செயலி வர உள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை