எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 22 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!
Tamil Nadu Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்– இலங்கை எல்லை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதும், அவர்களது மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழில் இருந்து வருகிறது. அவர்கள், தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனர். இதில், சில மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று அங்கேயே 2, 3 நாட்கள் தங்கி இருந்து மீன்கள் பிடித்து வருவது வழக்கமாகும். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த சுமார் 22 மீனவர்கள் தங்களது 4 மீன்பிடி படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 பேர் கைது
அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்ததுடன், 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக முகாமுக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, இலங்கை கடற்படையின் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர் – இதனால் என்ன பலன்?




மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
இதன் பின்னர், தமிழக மீனவர்கள் 22 பேரும் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அந்த பகுதி மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை முகாமுக்கு கொண்டு சென்றிருந்தது.
குறிப்பிட்ட நாள்களில் 47 மீனவர்கள் கைது
இதை தொடர்ந்து, தற்போதும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களில் 3 மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். மீதமுள்ளோர் நடைமுறை சிக்கல் காரணமாக விடுதலை செய்யப்படும் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனர். எனவே, இவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் தரக்கோரி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!