செஞ்சி சிறுமி வழக்கு! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் 10 பேர்.. குற்றவாளியை நெருங்கும் போலீசார்?
Gingee Girl Missing Case : செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன செஞ்சி சிறுமி வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் வசித்து வரும் வடிவேலு- பவானி தம்பதியின் 2- ஆவது மகள் 7 வயதான ஹேமலதா. இவருக்கு கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி அவரது பெற்றோர் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், மறுநாள் மர்மமான முறையில் காணாமல் போனார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி காணாமல் போய் 40 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது வரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் எதிர் வீட்டை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணின் உறவினர் என்று கூறப்படும் இளைஞர் உள்பட 10 பேரிடம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, சிறுமியின் தந்தை, தாய், பாட்டி மற்றும் எதிர் வீட்டு பெண் உள்பட பல்வேறு நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: ரூ.700 கோடி ஹெராயின் பறிமுதல்! ஐஸ்கிரீம் வியாபாரிக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு.. வெளிவந்த பகீர் தகவல்!
40 நாள்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை
அத்துடன், ஆலம்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகள், குளம், செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி இருந்தனர். அத்துடன் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறுமி கடத்தி செல்லப்பட்டரா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இதனிடையே, சிறுமி காணாமல் போன நாளன்று அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளை எரிந்து கொண்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செங்கல் சூளையில் சோதனை நடத்திய போலீசார்
இதனால், சிறுமியை கடத்திச் சென்று செங்கல் சூளையில் வைத்து எரித்து கொலை செய்து இருக்கலாமா என்ற கோணத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல் சூளையில் உள்ள சாம்பல் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், செங்கல் சூளையின் உரிமையாளர், சிறுமி காணாமல் போன நாளில் அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் அழைப்புகளை மேற்கொண்ட சுமார் 600 பேர் தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ இறுதி ஊர்வலம்.. வி. எஸ். பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!