தவெக எம்எல்ஏ இறுதி ஊர்வலம்.. வி. எஸ். பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!
Kolathur MLA V. S. Babu Funeral : உடல் நலக்குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தமிழக வெற்றிக் கழகத்திந் எம்எல்ஏ வி. எஸ். பாபுவின் உடலை முதல்வர் ஜோசப் விஜய் சுமந்து சென்றார். அத்துடன், இறுதி ஊர்வலத்தில் முதல்வர் நடந்து சென்றார்.
சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவாக இருந்து வந்தவர் வி. எஸ். பாபு. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சுமார் 70 நாள்களாக நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இன்றுவரை வி. எஸ். பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வந்தனர்.
வி.எஸ்.பாபு எம்எல்ஏ உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்
இன்று வெள்ளிக்கிழமை மாலை வி. எஸ். பாபுவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு, அவரது உடலை எரியூட்டுவதற்காக அருகில் உள்ள திரு. வி. க . நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, அவரது வீட்டிலிருந்து வி. எஸ். பாபுவின் உடலை அவரது உறவினர்கள் சிலர் வெளியே தூக்கி வந்தனர். அப்போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னே சென்று வி. எஸ். பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்றார். தொடர்ந்து, வீட்டின் வெளியே பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வி. எஸ். பாபுவின் உடல் ஏற்றப்பட்டு மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற முதல்வர்கள்- அமைச்சர்கள்
அப்போது, வி. எஸ். பாபுவின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பின்னால் முதல்வர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்து சென்றனர். திருவிக நகர் மின் மயானம் வரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடந்து சென்றார். அப்போது, வி. எஸ். பாபுவின் மகன்கள் அழுத போது, அவர்களை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறியவாறு முதல்வர் விஜய் நடந்து சென்றார். மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது.
( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)