ஜன.5ல் 2,000 பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’.. அமித் ஷா பங்கேற்கிறார்..
'Modi Pongal' celebration: தமிழகத்தில் பாஜக பெரிய அளவிலான அரசியல் நிகழ்சிக்கக்காக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜனவரி 5ஆம் தேதி “மோடி பொங்கல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 02: திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜனவரி 5ஆம் தேதி நடைபெறும் “மோடி பொங்கல்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், முதல் ஆளாக பாஜகவும், அதிமுகவும் 6 மாதங்களக்கு முன்பே தங்களது கூட்டணியை உறுதிசெய்தன. எனினும், அதன் பின்னர் மெளனம் காத்து வந்த அக்கட்சிகள் தற்போது தேர்தல் நெருங்குவதால் மீண்டும் தீவிர பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. அண்மையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் அதிமுக மேற்கொண்டிருப்பது கொள்கை கூட்டணி இல்லை, தேர்தல் கூட்டணி மட்டுமே என்று தெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து, கூட்டணியில் மாற்று கட்சியில் இணைப்பதிலும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.
இதையும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்..
இம்மாத இறுதிக்குள் என்டிஏ கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு:
தொடர்ந்து, தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் அதிமுக உள்ளது. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைக்க வேண்டுமென பாஜக தரப்பில் நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் அண்ணாமலை மூலம் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இம்மாத இறுதிக்குள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிறைவு கட்டத்தை எட்டும் என கூறப்படுகிறது.




ஜன.4, 5ல் அமித் ஷா தமிழகம் வருகை:
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக பெரிய அளவிலான அரசியல் நிகழ்சிக்கக்காக திட்டமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜனவரி 5ஆம் தேதி “மோடி பொங்கல்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
‘மோடி பொங்கல்’ விழா:
ஏற்கெனவே, அமித்ஷா ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” நிறைவு விழாவில் பங்கேற்ற பிறகு, திருச்சி ஸ்ரீரங்கம் வருகை தருகிறார். அதன் பின்னர் மன்னார்குடி ராணுவ மைதானத்தில் நடைபெறும் “மோடி பொங்கல்” நிகழ்வில் அவர் கலந்துக்கொள்வார் என்று பாஜக தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமைகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேலும் வேகமெடுக்கவுள்ளதாகவும், கூட்டணிக்கான இறுதி வடிவம் பொங்கலுக்கு பின் அமையும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.