அதிக கமிஷன் பெறலாம்… ஏடிஎம் அமைக்க உரிமம் – கோவையில் நூதன மோசடி
ATM License Scam : கோயம்புத்தூரில் ஒரு நிறுவனம் ஒன்று ஏடிஎம் மையம் அமைத்தால் அதிக கமிஷன் என கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத்தரக்கோரி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருக்கின்றனர்.

கோயம்புத்தூரில் (Coimbatore) ஏடிஎம் மையம் அமைக்க உரிமம் பெற்றுத் தருவதாக கூறி தமிழகத்தை சேர்ந்தவர்களிடமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 150க்கும் மேற்பட்டோரிடமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வந்த இசட்பிஇ ஏடிஎம் (ZPE ATM) என்ற தனியார் நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் ஏடிஎம் மையம் அமைத்து பணம் சேமியுங்கள், அதிக கமிஷன் பெறலாம் போன்ற விளம்பரங்களை வெளியிட்டு வந்துள்ளது. இதனை உண்மை என நம்பி பலர் இதில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மோசடி நடந்து எப்படி?
கடந்த 2023 ஆம் ஆண்டு இசட்பிஇ ஏடிஎம் என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்த விளம்பரங்களில், ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால், ஏடிஎம் மெஷின் வழங்கப்படும் எனவும், மாதந்தோறும் ஒரு நிலையான தொகையும், அதிக கமிஷனும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஏடிஎம் மையம் செயல்படும் கடை வாடகையில் 60 சதவீதத்தை நிறுவனமும், மீதமுள்ள 40 சதவீதம் முதலீட்டாளரும் வழங்க வேண்டும் என்றும், ஏடிஎம் மூலம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பணப்பரிவர்த்தனையில் கிடைக்கும் லாபத்தில் 60 சதவீதம் நிறுவனத்துக்கும், 40 சதவீதம் முதலீட்டாளருக்கும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க : தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையா? – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை




லட்சக்கணக்கில் மோசடி
இந்த விளம்பரங்களை உண்மை என நம்பி, தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் முதலீடு செய்துள்ளனர். ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.2 லட்சம் வரை வசூலித்த நிறுவனம், ஏடிஎம் வழங்க ஒப்பந்த ஆவணங்களையும் வழங்கியுள்ளன. சிலருக்கு ஏடிஎம் மெஷின்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஏடிஎம் மெஷின்கள் ஒரு வாரம் மட்டுமே செயல்பட்டிருக்கிறது. அதன் பின்னர் அந்த ஏடிஎம்மில் யாரும் பணம் நிரப்ப வரவில்லை, சில நாட்களில் அந்த ஏடிஎம் செயலிழந்திருக்கிறது.
இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்டபோதும் முறையான பதில் இல்லை என கூறப்படுகிறது. தங்கள் முதலீட்டை பெற்றுக்கொண்ட நிறுவனம், தங்கள் அலுவலகத்தை மூடிவிட்டதாகவும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் துரைசாமி மற்றும் ரம்யா துரைசாமி ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்கள் பணத்தை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : 2 மணி நேரம் மிச்சம்… சென்னை டூ நாகைக்கு ஈஸியா போகலாம்.. குஷியில் டெல்டா மக்கள்
இதனால் ஏமாந்த பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். “எங்களிடம் மோசடி செய்த **நிறுவன உரிமையாளர்கள் துரைசாமி மற்றும் ரம்யா துரைசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், முதலீட்டுத் தொகையை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் கோரியுள்ளனர்.