AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சீமைக் கருவை மரங்களுக்குள் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.. விருதுநகரில் பரபரப்பு!

சிதறிக் கிடந்த கற்களில் ஒன்றில் இரண்டு வரிகள் கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இதில் வடதலைச் செம்பி நாட்டு ஆயக்குடியான அழகிய பாண்டிய நல்லூர் சோமதேவன், விரதம் முடித்த பெருமான், குலசேகரக் காடுவெட்டி ஆகிய பாண்டிய அரச அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

சீமைக் கருவை மரங்களுக்குள் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு.. விருதுநகரில் பரபரப்பு!
800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலக் கல்வெட்டு
Sathis S
Sathis S | Updated On: 01 Jul 2026 14:16 PM IST

விருதுநகர், ஜூலை 01: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே 800 ஆண்டுகள் பழமையான, பிற்காலப் பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் காலத்து வரலாற்றுச் சிறமிக்க கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் நரிக்குடி பகுதியில் சமீபத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மானூர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் எதிரே, சீமைக் கருவை மரங்களுக்குள் சிதறிக்கிடந்த கற்களை ஆய்வு செய்தபோது இந்த அரிய கல்வெட்டு கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க : தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!

கல்வெட்டு கூறும் வரலாற்றுத் தகவல்கள்:

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பகிர்ந்துள்ள விவரங்கள் வருமாறு, தற்போது ‘மானூர்’ என்று அழைக்கப்படும் இவ்வூர், கல்வெட்டுகளில் ‘மானையூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அனாகுலீஸ்வரமுடைய நாயனார் (சிவன் கோயில்) மற்றும் விக்கிரமபாண்டிய விண்ணகரம் (திருமால் கோயில்) ஆகிய கோயில்கள் இருந்ததை நரிக்குடி கோயில் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

அதிகாரிகளின் பெயர்கள்:

சிதறிக் கிடந்த கற்களில் ஒன்றில் இரண்டு வரிகள் கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இதில் வடதலைச் செம்பி நாட்டு ஆயக்குடியான அழகிய பாண்டிய நல்லூர் சோமதேவன், விரதம் முடித்த பெருமான், குலசேகரக் காடுவெட்டி ஆகிய பாண்டிய அரச அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகக் கோயில்களுக்கு வழங்கப்படும் தானங்களின் இறுதியில் அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறும். அந்த வகையில், இதில் குறிப்பிடப்பட்டுள்ள சோமதேவன் என்பவர் பாண்டிய அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் ‘புரவுவரி தினைக்கள நாயகமாக’ இருந்துள்ளார்.

வில்லவராயன் பற்றிய குறிப்பு:

இந்த சோமதேவனின் முழு பெயர் ‘சோமதேவன் அழகிய மணவாளனான வில்லவராயன்’ ஆகும். இவர் முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் மற்றும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகிய இரு மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார் என்பதைத் திருப்பரங்குன்றம் (தென்பரங்குன்றம் குடைவரை), அழகர்கோயில், திருத்தங்கல் கோயில் கல்வெட்டுகள் மூலமும் உறுதிப்படுத்த முடிகிறது.

கால நிர்ணயம்:

கல்வெட்டில் வரும் ‘வடதலைச் செம்பி நாடு’ என்பது தற்போதைய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியைக் குறிப்பதாகும். இதன் அருகில் உள்ள மேலாய்குடி, கீழாய்குடி ஆகிய ஊர்களே கல்வெட்டில் ‘ஆயக்குடி’ என விவரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு, இக்கல்வெட்டு கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் (கி.பி. 1190 – 1218) காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியலாளர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிக்க: நாளை தவெகவில் இணைகிறேன், புதிய உத்வேகத்துடன்… – சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

ஏற்கனவே இந்த முருகன் கோயிலின் 34 துண்டுக்கல்வெட்டுகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த அரிய கல்வெட்டையும், சிதறிக் கிடக்கும் பிற வரலாற்றுச் சின்னங்களையும் முறையாகக் கோயிலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசிற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us