ஏர் பேக்கால் பறிபோன 7 வயது சிறுவனின் உயிர் – உயிரைக் காக்க வேண்டிய பொருளே உயிரை வாங்கிய பரிதாபம்
Airbag tragedy : சென்னை அருகே காரின் ஏர் பேக் திறந்ததால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரைக் காக்க வேண்டிய ஏர்பேக், ஒரு சிறுவனின் உயிரை பறித்த சம்பவம், அதன் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

சாலை விபத்துகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பலர் கை கால்களை இழந்து வாழ்நாள் முழுவதும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு சாலை விபத்து (Accident) தொடர்பாக ஒரு புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதனை தவிர்க்க தற்போதைய கார்கள் (Car) அதிக பாதுகாப்பு வசதியுடன் தயாரிக்கப்படுகின்றன.
ஏர்பேக்கால் பறிபோன சிறுவனின் உயிர்
பொதுவாக சாலை விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க சமீப காலமாக வாகனங்களில் ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. இந்த நிலையில் உயிரைக் காக்க வேண்டிய ஏர்பேக்கே சிறுவன் ஒருவனின் உயிரைப் பறித்திருக்கிறது. கல்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தன் அக்டோபர் 15,2025 அன்று காரில் தனது மகன் கவினுடன் திரூப்போரூர் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
இதையும் படிக்க : நெருங்கும் தீபாவளி…. வாடகைக்கு விடப்பட்ட கார்கள் பறிமுதல் – போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை
இந்த நிலையில் அவரது காரை பின்பக்கம் மற்றொரு கார் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தன் ஓட்டிச் சென்ற காரில் இருந்து ஏர்பேக் திறந்து முன் சீட்டில் இருந்த அவரது மகன் கவினின் முகத்தில் பலமாக மோதியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டது சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்திருக்கிறார். உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஏர்பேக் ஒரு உயிர் போக காரணமாக அமைந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக உயிரைக் காப்பாற்றும் என சொல்லப்படுகிற ஏர்பேக்கால் ஒரு உயிர் போய் இருப்பது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏர் பேக் எப்படி செயல்படும்?
ஏர்பேக் என்பது கார்களில் விபத்துகளின் போது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு சாதனம் ஆகும். விபத்து நேரத்தில் அது ஒரு சில வினாடிகளில் திறந்து பயணிகளை கடுமையான தாக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. கார் விபத்து நேரத்தில், அதில் உள்ள சென்சார் அந்த அதிர்வை உடனே பதிவு செய்கின்றன.
இந்த சென்சார்கள் கடுமையான மோதல் ஏற்பட்டால், ஏர்பேக் அமைப்புக்கு சிக்னல் அனுப்புகின்றன. சிக்னல் கிடைத்தவுடன், ஏர் பேக்கில் உள்ள கேஸ் இன்ஃபிளேட்டர் உடனடியாக செயல்பட்டு, ஏர் பேக்கில் காற்றை நிரப்புகின்றன.
இதையும் படிக்க : டேங்கர் லாரிகளின் போராட்டத்துக்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
காரில் அமர்ந்திருக்கும் பயணியின் தலை, மார்பு, முகம் போன்ற பகுதிகள் நேரடியாக கார் ஸ்டியரிங், டாஷ்போர்டு அல்லது கண்ணாடியை மோதுவதைத் தடுக்கும். ஏர் பேக் ஒரு மென்மையான தடுப்பு சுவராக மாறி, விபத்தின் தாக்கத்தை குறைத்து உயிர் காக்க உதவுகிறது.