வேலூரில் அதிர்ச்சி.. ரூ.6.5 கோடி ரயில்வே பொருட்கள் கொள்ளை.. முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது!
Vellore Railway Materials Stealing : வேலூர் மாவட்டத்தில் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான ரூ. 6.5 கோடி மதிப்பிலான இரும்பு மற்றும் செம்பு பொருள்களை திருடிய வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வேலூர் மாவட்டத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான இரும்பு மற்றும் செம்பு பொருட்களை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், லத்தேரி காவல் நிலையம் அருகே ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இரும்பு கம்பிகள், செம்பு கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும், ரயில் பெட்டிகள், ரயில் என்ஜின்கள், தண்டவாளங்கள், ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கூரைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பொருட்கள் ஆகும். இதில், குறிப்பிட்ட அளவிலான பொருட்கள் குறைவாக இருந்தது ரயில்வே போலீசார் கவனத்துக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
ரயில்வே நிர்வாகத்தின் ரூ.6.5 கோடி இரும்புகள் திருட்டு
இதில், சரக்கு வாகனத்தை பயன்படுத்தி பல நாட்களாக இரும்பு கம்பிகள் மற்றும் செம்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவெண் மற்றும் மர்ம நபர்களின் உருவம் ஆகியவற்றின் மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், முதல் கட்டமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்த திருட்டு சம்பவத்தில் பிராங்கிளின் என்பவருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: பாலியல் அத்துமீறல் புகார்.. 2 இன்ஸ்பெக்டர்கள்- 1 சப்-இன்ஸ்பெக்டர் வேலை காலி.. காவல்துறையில் பரபரப்பு!
பழைய இரும்பு கடையில் விற்பனை
அதன் அடிப்படையில், அந்தப் பகுதியை சேர்ந்த பிராங்கிளின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன், அவருடன் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இரும்பு, செம்பு கம்பிகளை திருடியதை என்ன செய்தீர்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதற்கு, திருடப்பட்ட பொருட்களை பழைய இரும்பு கடைகளில் உடைத்தும், உருக்கிய சந்தேகம் வராத வகையில் சிறிது, சிறிதாக விற்றதாக தெரிவித்தனர்.
5 பேரை கைது செய்த போலீசார்- தொடர் விசாரணை
மேலும், அதன் மூலம் கிடைத்த பணத்தை சொகுசு வாழ்க்கைக்காக பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். ஆனால், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு எங்களை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, இதேபோல, வேறு எங்கேயும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இலங்கைக்கு ரூ. 60 லட்சம் பீடி இலைகள் கடத்தல் முயற்சி.. சினிமா பாணியில் நடந்த சேஷிங்.. 2 பேரை தூக்கிய க்யூ பிரிவு போலீஸ்!