Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்சியில் 23, அரியலூரில் 25.. விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை நிபந்தனைகள்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் செப்டம்பர் 13 அன்று தொடங்குகிறது. அரியலூரில் நடைபெறும் இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை 25 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் பிரச்சாரம் இடை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் 23, அரியலூரில் 25..  விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை நிபந்தனைகள்!
விஜய்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Sep 2025 18:42 PM IST

அரியலூர், செப்டம்பர் 12: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 13) தனது முதற்கட்ட பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் அரியலூரில் 25 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கள நிலவரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  இப்படியான நிலையில் புதிதாக கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி ஆன நாளை திருச்சி மாவட்டம் மரக்கடை பகுதியில் தனது பரப்புரையை தொடங்குகிறார்.  காலை 10:30 மணி அளவில் அவர் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திருச்சியில் 23 கட்டுப்பாடுகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். திருச்சியை தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே தேர்தல் பரப்பரை மேற்கொள்ள உள்ளார்.

Also Read:  திருச்சியில் விஜய் பிரசாரம் செய்ய 23 நிபந்தனைகள் விதிப்பு!

இந்த நிலையில் அரியலூரில் 25 நிபந்தனைகளுடன் விஜய் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி அனுமதி அளித்துள்ளார். அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதியம் 2 மணி அளவில் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

அதன்படி, விஜய் பரப்புரை மேற்கொள்ளும் வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் அனுமதி கிடையாது. தேர்தல் பரப்புரைக்காக தொண்டர்கள் வரக்கூடிய வாகனங்களுக்கு பார்க்கிங் வசதிகள் குறித்து காவல்துறையினருடன் கலந்தாலோசித்து  ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது.

Also Read: ‘விஜய் தராதரம் அவ்வளவுதான்’ – கடுமையாக சாடிய கே.என்.நேரு

பொதுமக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். பரப்புரையின் போது தமிழக வெற்றிக் கழகத்தினர் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது பிற சாதி மற்றும் மதத்தினை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது. மேலும் பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது. சேதம் ஏற்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பெடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள் ஆகியவை விநியோகிக்க கூடாது. இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.