எனக்கே திருச்சியில் அனுமதி கொடுக்கல.. தவெகவுக்கு பதிலடி கொடுத்த KN நேரு
Vijay vs KN Nehru: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் 2026 தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக அரசு தடை போடுகிறது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் கே.என்.நேரு மறுத்துள்ளார். தாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது அனுமதி அளிக்கப்படவில்லை. காவல்துறையினர் தான் யாராக இருந்தாலும் முடிவு செய்கிறார்கள் என பதிலளித்துள்ளார்.

திருச்சி, செப்டம்பர் 10: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என அமைச்சர் கே.என்.நேரு கேள்வியெழுப்பியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 20 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அவரது சுற்றுப்பயணம் தொடர்பாக அட்டவணையும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய் தனது பிரச்சாரத்தை திருச்சி மாவட்டத்தில் இருந்து தொடங்கவுள்ளார். இந்த நிலையில் திருச்சியில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சி காந்தி மார்க்கெட், மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தவெகவுக்கு ஆளும் திமுக அரசால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடைய திருச்சியில் இன்று செய்தியாளர்களை அமைச்சர் கே.என்.நேரு சந்தித்தார். அவரிடம் திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு புத்தூர் நால்ரோடு பகுதியைக் கேட்ட இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
Also Read: விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை – சி.டி.நிர்மல் குமார்




எங்களுக்கே அனுமதி கொடுக்கவில்லை
அதற்கு பதில் அளித்த அவர், எங்களுக்கு அதிமுக ஆளும் அரசாக இருந்தபோது அனுமதி கொடுத்தார்களா என்றால் கிடையாது. திருச்சி கண்டோமென்ட் போஸ்ட் ஆபீஸில் ஆளும் கட்சியாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. நாங்கள் போய் அனுமதி கேட்ட போது நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தால் பண்ணிக் கொள்ளுங்கள் என காவல்துறையினர் தெரிவித்தார்கள். புத்தூர் நால்ரோடு பகுதியில் கூட எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதன் பிறகு நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அழைத்து பேசினேன். நீங்கள் அனைத்து கட்சியினரையும் கூட்டி ஒரு மீட்டிங் போடுங்கள். அதில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு பொதுவான இடம் ஒன்றை தேர்வு செய்து தாருங்கள் என தெரிவித்தேன். அதில் ஒரு சில இடங்கள் தேர்வு செய்தார்கள்.
Also Read: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் எங்கே பேசுகிறார்? அனுமதி வழங்கிய காவல் துறை..
தற்போது விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது ஜூபிட்டர் தியேட்டர் இருக்கும் பகுதியை நோக்கி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை எங்கெல்லாம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறதோ அங்கு ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனுமதி கொடுப்பதில்லை. நமக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் திட்டுகிறோம். கிடைத்தால் முடிவு சரி என சொல்கிறோம்” என கே.என்.நேரு கூறியுள்ளார்.