சென்னையில் இதுவரை 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்; 450 டன் அகற்ற மாநகராட்சி இலக்கு!
Diwali Cracker Waste: தீபாவளி பண்டிகை ஒட்டி சென்னை முழுவதும் இதுவரை சுமார் 200 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலும் கழிவுகளை அகற்றி, மொத்தம் 450 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
நவம்பர் 9, 2026: சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை 200 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 450 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற இலக்கு நிர்ணயித்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளியின்போது உருவாகும் பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் தனியாகப் பிரித்து, அதற்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேகப் பைகளில் சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை முழுவதும் இதுவரை சுமார் 200 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மேலும் கழிவுகளை அகற்றி, மொத்தம் 450 மெட்ரிக் டன் கழிவுகளை அகற்ற மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க: சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!
மழையின் காரணமாக பட்டாசு கழிவுகள் சாலைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதால் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து சாலைகளில் தேங்கியுள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதலாக 600 பணியாளர்கள், 350 வாகனங்கள்
பட்டாசு கழிவுகளை விரைந்து அகற்றும் பணிக்காக கூடுதலாக 600 தூய்மைப் பணியாளர்களும், 350 வாகனங்களும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன. மேலும், பட்டாசு கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக தூய்மைப் பணியாளர்களுக்கு 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் சேகரிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!
இவ்வாறு சேகரிக்கப்படும் பட்டாசு கழிவுகள், அறிவியல் பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் சுத்திகரித்து அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன.
பட்டாசு கழிவுகளை தனியாக பிரித்து கொடுக்க மக்களுக்கு அறிவுறுத்தல்
எனவே, பொதுமக்கள் பட்டாசு கழிவுகளைத் தனியாகப் பிரித்து, தங்கள் பகுதிகளுக்கு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை வீட்டு குப்பைகளுடன் கலக்காமலும், சாலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டாமலும் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சென்னையை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.