உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டி… 15,047 காளைகள்-5,234 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு
Madurai Jallikattu Competition: மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக் கட்டு போட்டிகளுக்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், அவனியாபுரத்தில் அதிக அளவிலான காளைகளை அதன் உரிமையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர் .

மதுரை ஜல்லிக்கட்டு போட்டி முன்பதிவு
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி, காளை விடும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதே போல, பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் ஜனவரி 15- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு கடந்த புதன்கிழமை ( ஜனவரி 7) தொடங்கி நேற்று வியாழக்கிழமை ( ஜனவரி 8) மாலை நிறைவடைந்தது. இதில், 15,047 காளைகள் மற்றும் 5,234 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லூரில் அதிக காளைகள் முன்பதிவு
அதன்படி, மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 15- ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதில், அவனியாபுரத்தில் 3,090 காளைகளும், 1,849 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். பாலமேட்டில் 5,747 காளைகளும், 1,913 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இதே போல, அலங்காநல்லூரில் 6,210 காளைகளும், 1,472 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த மூன்று இடங்களில் அலங்காநல்லூரில் தான் அதிக அளவிலான காளைகளை அதன் உரிமையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க: 2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி…காளைகளுடன் மல்லுகட்டிய காளையர்கள்!
ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பரிசீலனை
இவர்களின் விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்படும். இதில், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதன் பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி உடைய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்கலாம்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது ஞாபகத்துக்கும் முதலில் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த போட்டியில், மாடுபிடி வீரர்கள் எந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் ஆர்வலர்களும் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றனர். இதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி எப்போது நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளை அமைச்சர்கள் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு…முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு!