Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இங்கு வாங்கலாம்…கோயம்பேட்டில் சிறப்பு சந்தை!

Koyambedu Pongal Special Market : பொங்கல் பண்டிகைக்காக கோயம்பேட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் பொங்கல் இடுவதற்கு தேவையான அனைத்து பொருள்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் ஆர்வமுடன் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர் .

பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் இங்கு வாங்கலாம்…கோயம்பேட்டில் சிறப்பு சந்தை!
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 08 Jan 2026 11:15 AM IST

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொதுமக்கள் பொங்கல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக ஒவ்வொரு ஊரிலும் கரும்பு, மஞ்சள் குலை, காய்கறிகள் உள்ளிட்ட பொங்கலிடுவதற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதற்காக தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதேபோல, சந்தைகளும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும். இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் வியாழக்கிழமை (ஜனவரி 8) சிறப்பு சந்தை செயல்பட உள்ளது. பொதுவாக கோயம்பேட்டில் ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கமாகும். இதில், பண்டிகைகளுக்கு தேவையான வாழை இலை, வாழைக்கன்று, மஞ்சள் குலை, காய்கறிகள், கரும்புகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும்.

10 நாள்கள் நடைபெறும் சிறப்பு சந்தை

கோயம்பேட்டில் இன்று தொடங்கியுள்ள சிறப்பு சந்தை வருகிற ஜனவரி 17ஆம் தேதி ( சனிக்கிழமை) வரை 10  நாள்கள் செயல்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பு வரத்து தொடங்கி உள்ளது. இங்கு 18 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 400 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, காய்கறிகள், பொங்கல் இடுவதற்கு தேவையான பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?

சிறப்பு சந்தையில் மக்கள் கூட்டம்

இந்த சிறப்பு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொங்கலிடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால், கோயம்பேடு சிறப்பு சந்தை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதே போல, மாட்டுப் பொங்கலுக்கு கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், மாடுகளின் கழுத்தில் கட்டக்கூடிய சலங்கைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அங்காடி நிர்வாக குழு நடத்தும் சிறப்பு சந்தை

முன்பு கோயம்பேட்டில் 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு சந்தையை நடத்துவதற்கு அங்காடி நிர்வாக குழு சார்பில் ஏலம் விடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு சந்தைகள் நடத்துவதற்கான ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. இதற்கு பதிலாக அங்காடி நிர்வாக குழுவே சிறப்பு சந்தையை நடத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருள்களும்…

அதன்படி, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, கோயம்பேட்டில் 10 நாட்கள் சிறப்பு சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் படிக்க:ரூ.3000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு… ரேஷன் கடைகளில் இன்று விநியோகம் தொடக்கம்..