தமிழகத்தில் 1,200 பேர் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்பு.. மருத்துவ அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!
Life Saving Mission By Tamil Nadu Government | தமிழகத்தில் தற்கொலை விகிதத்தை குறைக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு நட்புடன் உங்களோடு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 1,200 பேர் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை, ஜூலை 21 : தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் ஒரு சிக்கல் தான் மன அழுத்தம். நேசித்தவர்களை இழப்பது, காதல் தோல்வி, பொருளாதார சிக்கல் என பல சிக்கல்களில் மனிதர்கள் சிக்கி தவிக்கின்றனர். இதன் காரணமாக கடும் மன அழுத்தத்தில் தள்ளப்படும் அவர்கள் தங்களது உயிரையே மாய்த்துக்கொள்ளும் மிக ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் (Tamil Nadu) தற்கொலை எண்ணத்தில் இருந்த 1,200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கப்பட்ட 1,200 பேர்
இவ்வாறு நடைபெறும் தற்கொலைகளை தடுக்க 2022 ஆம் ஆண்டு நட்புடன் உங்களோடு என்ற மனநல சேவை திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தில், மனநல பிரச்னைகள் உள்ளவர்கள் 14416 என்ற இலவச உதவி எண்ணை தொடர்புக்கொண்டு, தொலைபேசி வழியாக 24 மணி நேரமும் ஆலோசனை பெற முடியும். இந்த சேவை ஏராளமானவர்களின் உயிரை காப்பாற்றும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க : சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள்… வழியிலேயே காத்திருந்த விபத்து.. ராசிபுரத்தில் சோகம்!
சேவை குறித்து கூறும் மருத்துவ அதிகாரிகள்
மன உளைச்சல், மன கவலை, பாலியல் துன்புறுத்தல், உறவுகள் சார்ந்த சிக்கல்கள், தேர்வு பயம், கடன் சுமை, தன்நம்பிக்கை குறைவு, தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் மக்கள் இந்த சேவையில் உதவி கோரியுள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்துள்ளோம். இந்த அழைப்புகளில் ஏறக்குறைய பல்வேறு காரணங்களால் சுமார் 1,200 பேர் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இருந்தனர்.
இதையும் படிங்க : போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.. கைதான திமுக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!
அவர்களுக்கு தகுந்த மனநல ஆலோசனை வழங்கி, அவர்களின் எண்ணங்களை மாற்றி தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுவித்துள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். பொதுமக்களுக்கு தற்கொலை எண்ணம் வராமல், அவர்களை காப்பாற்ற அரசு செய்த இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.