SA vs AUS: ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றமா?
SA Levels Series 1-1: கெபெர்ஹா டெஸ்டில், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடரை 1-1 என சமன் செய்தது. பவுமாவின் அதிரடி சதம் (179), மார்கோ ஜான்சனின் ஆல்ரவுண்ட் பிரகாசம் (85 ரன்கள், 5 விக்கெட்கள்) அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றின. மழை தடங்கல்களுக்கு மத்தியிலும் தென்னாப்பிரிக்கா வலிமையாக மீண்டது.
கெபெர்ஹாவில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியானது ஆஸ்திரேலியாவை (SA vs AUS) ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதல் இன்னிங்ஸில் ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பிறகு, தென்னாப்பிரிக்கா வலுவாக மீண்டு வந்து போட்டியின் போக்கையே மாற்றியது. மழை காரணமாக கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆட்டம் தடைபட்ட போதிலும், தென்னாப்பிரிக்கா அணி (South Africa Cricket Team) ஒரு வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது.
ஃபாலோ-ஆன் வழங்கப்பட்ட போதிலும், ஆஸ்திரேலிய அணியால் ஒரு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை 1-1 என சமன் செய்ய உதவியுள்ளது. ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது, வருகின்ற 2026 அக்டோபர் 27 முதல் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.




ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆதிக்கம்:
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் கடைசி செஷனில் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணி வெறும் 40 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதே நேரத்தில், 5 விக்கெட்க்குள் 92 ரன்களில் பின்தங்கியிருந்தது. இருப்பினும், கேப்டன் டெம்பா பவுமா ஒருபுறம் இருந்து போராடி அணியை மீட்டெடுத்தார். பவுமா, ரியான் ரிகெல்டனுடன் 5வது விக்கெட்டுக்கு 52 ரன்களும், முல்டருடன் 6வது விக்கெட்டுக்கு 18 ரன்களும், மார்கோ ஜான்சனுடன் 7வது விக்கெட்டுக்கு 132 ரன்களும், சைமன் ஹார்மருடன் 8வது விக்கெட்டுக்கு 183 ரன்களும் என ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பவுமா 179 ரன்கள் என்ற சிறப்பான இன்னிங்ஸை அடித்தார். அதே நேரத்தில், மார்கோ ஜான்சன் 85 ரன்களும், சைமன் ஹார்மர் 83 ரன்களும் எடுத்தனர். இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா போட்டியின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தியது.
இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. பதிலுக்கு ஆடிய ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் வெறும் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்கோ ஜான்சென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்தார். அவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் நல்ல ஆதரவை அளித்தனர். இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது.
ஃபாலோ-ஆன் கொடுக்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வர முயற்சித்தது. இருப்பினும், ஆஸ்திரேலியா 295 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டனர். ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், வையன் முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஜான்சனும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தனது சிறப்பான சதத்திற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
ALSO READ: 93 பவுண்டரிகள்! 30 சிக்ஸர்கள்! வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங் செய்த இலங்கை!
WTC தரவரிசையில் யார் எந்த இடத்தில் இருக்கிறார்?
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு வெளியிடப்பட்ட புள்ளி அட்டவணையின்படி, ஆஸ்திரேலியா 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 72.22 சதவீதப் புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 66.67 சதவீதப் புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், வங்கதேசம் 55.56 சதவீதப் புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளன.
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஆடிய 11 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியா 67 புள்ளிகளுடன் 51.52 சதவீத வெற்றி விகிதத்துடன் 5வது இடத்தில் உள்ளது.