IPL 2027: மீண்டும் கேப்டன் ஆனது ஏன்..? தருணத்தை நினைவு கூர்ந்த ரோஹித் சர்மா!
Rohit Sharma Captaincy Return: ஐபிஎல் 2026ல் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்த நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க அழைக்கப்பட்டார். தொடக்கத்தில் தயங்கினாலும், தான் உருவாக்கி வளர்த்த அணியை இக்கட்டான நிலையில் கைவிட மனமில்லாமல், தலைமைப் பொறுப்பை ஏற்க முடிவெடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 2026 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்குச் சரிந்தது. இது மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணியின் இந்தத் தொடர் தோல்வி ரோஹித் சர்மாவை மிகவும் பாதித்தது. ‘எம்ஐ டிவி’க்கு அளித்த பேட்டியில் மீண்டும் கேப்டனாகும் தருணத்தை நினைவு கூர்ந்த ரோஹித் சர்மா (Rohit Sharma), “ஐபிஎல் 2026 முடிந்த பிறகு, வீட்டில் என் மனைவி ரித்திகாவுடன் அணியின் மோசமான செயல்பாடு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். அணி எங்கே தடுமாறுகிறது, பழைய பெருமையை எப்படி மீட்டெடுப்பது என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக, அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆகாஷ் அம்பானி என்னை அழைத்தார்,” என்று கூறினார்.
ALSO READ: 6வது கோப்பைதான் இலக்கு.. ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா மனமாறிய காரணம் என்ன..?
தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா, “ஆகாஷ் அம்பானியின் அழைப்பிற்குப் பிறகு, இருவரும் நேருக்கு நேர் சந்தித்து, அணியை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது குறித்து நீண்ட நேரம் விவாதித்தனர். அப்போது, ஆகாஷ் அம்பானி நேரடியாக, “நீங்கள் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தலைமை தாங்கத் தயாரா?” என்று கேட்டார். ஆகாஷ் என்னிடம் கேட்டபோது, ’தற்போது நான் இதற்கு மனதளவில் தயாராக இல்லை’ என்பதே என் உண்மையான எண்ணமாக இருந்தது.




2024ம் ஆண்டுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கும் சரியான மனநிலையில் நான் இருக்கிறேனா என்பது குறித்து எனக்குக் குழப்பமாக இருந்தது. அதனால், நான் வீட்டிற்குச் சென்று, அதைப் பற்றி நிதானமாகச் சிந்திக்க அவகாசம் கேட்டேன். நான் வீட்டிற்குச் சென்று நிறைய யோசித்தபோது, ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது—இது நீ உருவாக்கி வளர்த்தெடுத்த அணி. நீ இந்த அணியை 10 ஆண்டுகளாக வழிநடத்தினாய். இப்போது, அணி சிக்கலில் இருக்கும்போது, அந்தச் சவாலை மீண்டும் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று கூறினார்.
அணியை மாற்ற முடிவு..
அணியை மாற்றுவது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியுமே தோல்வியடைந்து கொண்டிருந்தது. இந்த அணிக்கு நான் கேப்டனாகத் தேவை என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த அணிக்கு இப்போது ஒரு தெளிவான திசை தேவை. அந்தத் திசையைக் காட்டும் பொறுப்பு எனக்கு இருந்தால், அணியை வழிநடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் பொல்லார்டுக்கு இந்த அணியின் கலாச்சாரம் நன்றாகத் தெரியும். கடினமான காலங்களில் அணியை மீட்டெடுக்கும் கலையும் அவருக்குத் தெரியும்,” என்று கூறினார்.
ALSO READ: கேப்டன்ஷி தராத கோபமா..? துணை கேப்டன் பதவியை மறுத்த பும்ரா..!
அதன்படி இனி, தனது நெருங்கிய நண்பரான கீரன் பொல்லார்டின் வழிகாட்டுதலின் கீழ், ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6வது ஐபிஎல் கோப்பையை வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.