IPL 2026: மீண்டும் மீண்டும் விதிமீறல்.. ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!
BCCI Warns IPL Teams Owner: ஐபிஎல் 2026 சீசனில் போட்டியின் போது அணி உரிமையாளர்கள் ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸிலிருந்து வீரர்களிடமோ அல்லது துணைப் பணியாளர்களிடமோ விதிமுறைகளுக்கு எதிராகப் பேச முயன்றதும் காணப்பட்டது. மேலும் சிலர் செல்போனுடன் அனுமதிக்கப்படாத வளாகப் பகுதிகளுக்குள் கூட நுழைந்தனர்.
ஐபிஎல் 2026 சீசனின்போது (IPL 2026) விதிகளை மீறியதன் காரணமாக, அனைத்து ஐபிஎல் அணிகள் மீதான தனது பிடியை பிசிசிஐ கடுமையாக்கியுள்ளது. ஊழல் தடுப்புப் பிரிவின் (ACU) புகார்களைத் தொடர்ந்து பிசிசிஐ (BCCI) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் டக்அவுட்டில் அமர்ந்தபடி தங்கள் செல்போனை பயன்படுத்துவதும், வேறு சிலர் ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸிலிருந்து வீரர்கள் அல்லது துணைப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும் கண்டறியப்பட்டது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து, ஐபிஎல் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தொடர்பான விதிகளை அனைத்து உரிமையாளர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று எச்சரித்து, பிசிசிஐ ஒரு முறையான அறிவுறுத்தலை வெளியிட்டது.
ALSO READ: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய MI, LSG.. எந்தெந்த அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு..?
என்ன நடந்தது..?
ஐபிஎல் போட்டிகளின் போது அணி உரிமையாளர்களும் அதிகாரிகளும் பாதுகாப்பு விதிகளை மீறுவது காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் முறைப்படியான அறிவிப்பை அனுப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், குறிப்பிட்ட அனுமதி இல்லாமல் போட்டிகளின் போது அணி உரிமையாளர்களும் பிரதிநிதிகளும் வீரர்களின் ஓய்வறைக்கோ அல்லது ஸ்டேடியத்திற்கோ செல்லக்கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.




இது தவிர, போட்டியின் போது அணி உரிமையாளர்கள் ஹாஸ்பிடாலிட்டி பாக்ஸிலிருந்து வீரர்களிடமோ அல்லது துணைப் பணியாளர்களிடமோ விதிமுறைகளுக்கு எதிராகப் பேச முயன்றதும் காணப்பட்டது. மேலும் சிலர் செல்போனுடன் அனுமதிக்கப்படாத வளாகப் பகுதிகளுக்குள் கூட நுழைந்தனர். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்ட மறுத்ததுடன், அறிவுறுத்தல்களையும் புறக்கணித்தனர்.
ALSO READ: மும்பையை அன் ஃபாலோ செய்தாரா ஹர்திக்..? அணிக்குள் புகைச்சலா?
பிசிசிஐ எச்சரிக்கை:
போட்டி நேரத்தின்போது வெளியாட்கள் வீரர்களுக்கு அருகில் செல்வது, ஆட்டத்தின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஊழல் தடுப்புப் பிரிவு நம்புகிறது. அணி உரிமையாளர்கள் வீரர்கள் அமரும் இடத்திற்கு (டக்அவுட்) அருகில் இருந்து விதிகளை மீறுவதைக் காட்டும் ஏராளமான புகைப்படங்களும் வெளிவந்தன. இது தொடர்பாக, பிசிசிஐ ஐபிஎல் 2026 சீசனில் பங்கேற்கும் 10 அணிகளின் உரிமையாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது என்றும் தெளிவாக எச்சரித்துள்ளது. மேலும், அணி உரிமையாளர்கள், விருந்தினர்கள் அல்லது ஊழியர்கள் விதிகளை மீறினால், முழு அணியும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.