Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: காத்திருக்கும் ரசிகர்கள்.. பெங்களூவில் ஆர்சிபி வீரர்கள் வெற்றி அணிவகுப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாட, பெங்களூரில் வெற்றி அணிவகுப்பு நடைபெற உள்ளது. விதான் சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை 2.5 கி.மீ தூரம் அணிவகுப்பு செல்லும். 17 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி வெற்றி பெற்றது கர்நாடகாவில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2025: காத்திருக்கும் ரசிகர்கள்.. பெங்களூவில் ஆர்சிபி வீரர்கள் வெற்றி அணிவகுப்பு!
பெங்களூரு அணி வெற்றி ஊர்வலம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Jun 2025 12:39 PM

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்று வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் ஒரு பகுதியாக திறந்தவெளி பேருந்தில் சாம்பியன் கோப்பையுடன் குறிப்பிட்ட தூரம் ஊர்வலம் செல்ல உள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்ற போது பலரும் அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என விருப்பபட்டனர். 17 ஆண்டுகளாக கோப்பை கனவாக இருந்த நிலையில் 18வது ஆண்டில் அது நிறைவேறியுள்ளது. பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதால் கர்நாடகா மாநிலம் முழுக்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இப்படியான நிலையில் பெங்களூருவில் உள்ள கர்நாடகா சட்டமன்றம் இயங்கும் விதான் சௌதா மாளிகை தொடங்கி பெங்களூரு சின்னசாமி மைதானம் வரை சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பெங்களூரு அணி வீரர்கள் வெற்றி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.

பெஙகளூரு அணி நிர்வாகம் அறிவிப்பு

அகமதாபாத்தில் இருந்து கிளம்பி பெங்களூரு வரும் வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த அணிவகுப்பானது மாலை 3.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி விவரம்

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் தொடர் வெகு விமரிசையாக தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் பதற்றம் காரணமாக 10 நாட்கள் நிறுத்தப்பட்டு பின்னர் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் பிளே ஆப் சுற்றில் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேசமயம் வெளியேற்றுதல் சுற்றில் குஜராத் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் மும்பை அணியை பஞ்சாப் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி 2025 ஜூன் மூன்றாம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களம் கண்ட பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 18 ஆண்டுகளாக அந்த அணி கோப்பையை வெல்லாதா என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி கிடைத்தது. பெங்களூரு அணிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.