மகப்பேறு விளையாட்டு வாழ்க்கையின் முடிவல்ல… குழந்தை பெற்ற கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஐசிசி முக்கிய முடிவு
பிரசவத்திற்குப் பிறகு கிரிக்கெட் வீராங்கனைகள் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்புவதற்கான கட்டமைப்பை உருவாக்க ஐசிசி முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதில் கிரிக்கெட் வீராங்கனைகள் மட்டுமல்லாமல், தேசிய கிரிக்கெட் வாரியங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அடங்குவர். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக ஐசிசி (ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. தாயாகும் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிரசவத்திற்குப் பிறகு அவர்கள் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்புவதற்கு உதவும் வகையிலும், ‘பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடுவதற்கான வழிகாட்டுதல்களை ஐசிசி முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
குழந்தை பெற்ற கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஐசிசி முக்கிய முடிவு
பிரசவத்திற்குப் பிறகு வீராங்கனைகள் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்புவதற்கான கட்டமைப்பை வழங்குவதே இந்த புதிய திட்டத்தின் நோக்கமாகும். இதில் கிரிக்கெட் வீராங்கனைகள் மட்டுமல்லாமல், தேசிய கிரிக்கெட் வாரியங்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் உள்ளடங்குவர்.
வீராங்கனைகளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும், மகளிர் கிரிக்கெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் ஐசிசி கொண்டுள்ள “பரந்த அர்ப்பணிப்பின்” ஒரு பகுதியாகவே இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐசிசி-யின் மருத்துவ ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், ஆஸ்திரேலிய அணியின் மருத்துவருமான டாக்டர் பிலிப்பா இங் என்பவரின் தலைமையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டன. இத்திட்டம் “6 Rs” என்று அழைக்கப்படும் ஆறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது: தயார் செய்தல், மதிப்பாய்வு செய்தல், மீட்டெடுத்தல், உடற்தகுதியை மேம்படுத்துதல், திரும்புதல், மற்றும் செம்மைப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
பிரசவத்திற்குப் பிந்தைய ஆரம்பக்கட்ட உடல் மீட்பு, மருத்துவ மற்றும் மனநலப் பரிசோதனைகள், முறையான பயிற்சிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல், கிரிக்கெட் விளையாட்டுக்கு ஏற்றவாறு உடலைத் தயார்படுத்துதல், போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மீண்டும் விளையாடத் தொடங்கிய பிறகு வீராங்கனைகளின் உடல்நலத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவை இந்த அணுகுமுறையில் அடங்கும் என்று ஐசிசி-யின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.