IPL 2027: உதவி பயிற்சியாளராக ஆல்பி மோர்கல்.. குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்..!
CSK Coaching Staffs: ஐபிஎல் 2027 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் வீரர் ஆல்பி மோர்க்கலை உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஜாகீர் கான் தலைமையிலான புதிய பயிற்சிக் குழுவில், கரேத் பேட்டி, மோஹித் ஷர்மா ஆகியோரும் இணைகின்றனர். ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சிஎஸ்கே, வரும் மினி ஏலத்திற்கு முன் வீரர்களைத் தக்கவைக்கும் பணியில் ஈடுபடும்.
ஐபிஎல் 2027 (IPL 2027) தொடருக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஆல்பி மோர்க்கலை உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. முன்னாள் இந்திய அணி வேகப்பந்து வீச்சாலர் ஜாகீர் கான் தலைமையிலான புதிய பயிற்சிக் குழுவில் ஆல்பி இடம்பெறுவார். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால், புதிய பயிற்சி குழு மீது சென்னை ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
ஆல்பி மோர்கலும்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்..
45 வயதான ஆல்பி மோர்கல், 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசன் முதல் 2013 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்தார். இந்தக் காலகட்டத்தில் ஆல்பி மோர்கல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடினார். இவர் விளையாடிய காலக்கட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களை வென்றது. மேலும், சென்னை அணி 2010-ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வென்றது.




ஆல்பி மோர்கல் 2026 ஜூலையில் SA20 சீசனில் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பதிலாக ஜோபர்க் சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
பயிற்சியாளர் குழுவில் கரேத் பேட்டியும் இடம்:
சென்னை அணி, இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கரேத் பேட்டியை உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. அவர் சர்ரே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இதற்கிடையில், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருப்பார். மோஹித் தனது ஐபிஎல் பயணத்தையும் சென்னை அணியில்தான் தொடங்கினார்.
சிஎஸ்கே அணி குறித்து பேசிய மோஹித் சர்மா, “சிஎஸ்கே அணிக்குத் திரும்புவது தனக்கு வீட்டிற்குத் திரும்புவது போன்றது. அந்த அணியுடனான தனது காலத்தையும், பர்ப்பிள் கேப் வென்ற நினைவுகளும் திரும்புகிறது.தனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணியின் இளம் வீரர்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், சிஎஸ்கே அணியின் உதவிப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் தனது பதவியில் தொடர்வார். மேலும், ஜேம்ஸ் ஃபாஸ்டர் பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பைத் தொடர்ந்து கவனிப்பார்.
மோர்கல் கூறியது என்ன..?
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து பேசிய ஆல்பி மோர்கல், “சென்னை சூப்பர் கிங்ஸ் குடும்பத்துடன் தனக்கு ஒரு சிறப்பான பிணைப்பு, சேப்பாக் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரமும் விசில் சத்தமும் இன்றும் தனது விளையாட்டு நாட்களை அவருக்கு நினைவூட்டுகின்றன. களத்திலும் களத்திற்கு வெளியேயும் அணியுடன் செலவிட்ட தருணங்கள் தனக்கு மிகவும் சிறப்பானவை. தனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
ALSO READ: ஆர்சிபி வெற்றிக்கும்.. சிஎஸ்கே தோல்விக்கும் இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த தோனி!
வருகின்ற 2026 டிசம்பரில் நடைபெறவுள்ள ஐபிஎல் மினி-ஏலத்திற்கு முன்னதாக, தக்கவைக்கப்பட வேண்டிய வீரர்களின் பட்டியலை இறுதி செய்வதே சிஎஸ்கே பயிற்சிக் குழுவின் முதல் முக்கியப் பணியாக இருக்கும் .