IPL2027: டெல்லிக்கு படையெடுக்கும் பயிற்சியாளர்கள்.. ஸ்பின் கோச்சாக அமித் மிஸ்ரா நியமனம்!
Amit Mishra Returns: முன்னாள் இந்திய மற்றும் ஐபிஎல் சுழற்பந்து ஜாம்பவான் அமித் மிஸ்ரா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக ஐபிஎல் 2027 தொடருக்காக நியமிக்கப்பட்டுள்ளார். தனது முதல் ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸிற்கே பயிற்சியாளராகத் திரும்பியுள்ளார் மிஸ்ரா. ஓய்வுக்குப் பிறகு இது அவரது முதல் பயிற்சிப் பொறுப்பாகும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி (Delhi Capitals), முன்னாள் இந்திய லெக்-ஸ்பின்னர் அமித் மிஸ்ராவை (Amit Mishra) ஐபிஎல் 2027 தொடருக்கான தங்களது சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இதன்மூலம், அமித் மிஸ்ரா தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய அதே அணிக்கு ஒரு பயிற்சியாளராக திரும்பியுள்ளார். 43 வயதான அமித் மிஸ்ரா, கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது மிஸ்ரா முதன்முறையாக ஐபிஎல்லில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.
ALSO READ: அதிரடி காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்.. பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
அமித் மிஸ்ரா கூறியது என்ன..?
டெல்லி கேப்பிடல்ஸ் அணி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் அமித் மிஸ்ரா கூறியதாவது, “நான் என்னை ஒரு ஜாம்பவான் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால், எனக்கு இந்த ஐபிஎல் சீசன் மிகவும் சிறப்பாக அமைந்தது. டெல்லி பெரிய மனதுள்ள மக்களுக்குச் சொந்தமானது. ஐபிஎல் முதல் சீசன் தொடங்கியபோது நான் டெல்லி அணியில் ஒரு அங்கமாக இருந்தேன். இன்று, நான் எனது பயிற்சியாளர் பணியைத் தொடங்கும்போது, அதுவும் டெல்லி அணியுடன்தான், அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புலி தன் இரையை ஒருபோதும் கைவிடுவதில்லை. டெல்லிதான் என் இதயத்துடிப்பு. இத்தனை ஆண்டுகளாக டெல்லி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை அவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சிப்போம்.” என்று தெரிவித்தார்.




டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில்
உள்ளது . கடந்த 2026 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. அமித் மிஸ்ரா 2008-ல் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார். தனது அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா ஐபிஎல்-லில் இதுவரை 3 ஹாட்ரிக்களை எடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடும் மிஸ்ரா, ஐபிஎல் வரலாற்றில் அதிக ஹாட்ரிக்கள் எடுத்தவர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
அமித் மிஸ்ராவின் ஐபிஎல் வாழ்க்கை:
தனது மெதுவான மற்றும் ஸ்விங் ஆகும் லெக்-பிரேக் பந்துகளுக்குப் பெயர் பெற்ற மிஸ்ரா, 2022-ஐத் தவிர, 2008 முதல் 2024 வரையிலான ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பங்கேற்றார். இந்தக் காலகட்டத்தில், அமித் மிஸ்ரா டெல்லி கேப்பிட்டல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகளில் அங்கம் வகித்தார். மிஸ்ரா தனது கடைசி ஐபிஎல் போட்டியை 2024-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். மிஸ்ரா இதுவரை 162 ஐபிஎல் போட்டிகளில் 7.37 என்ற எகானமி ரேட்டுடன் 174 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மிஸ்ரா 2003 முதல் 2017 வரை இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.