Indian Cricket Team Schedule: இந்திய அணியின் அடுத்த போட்டி எப்போது…? யாருடன்..? முழு விவரம் இதோ!
Asia Cup 2025: இந்திய கிரிக்கெட் அணியின் 2025 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பரில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் (India – England Test Series) கொண்ட தொடரின் கடைசி போட்டியில் சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-2 என சமன் செய்தது. இந்த வரலாற்று வெற்றியுடன், இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்தது. இந்தநிலையில், இந்திய அணி (Indian Cricket Team) அடுத்து எப்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றும் ஆசியக் கோப்பையில் விளையாடவுள்ளது. இதன் போட்டிகள் எப்போது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஆசிய கோப்பை எப்போது, எங்கு நடைபெறும்?
ஆசிய கோப்பை 2025 ஐ போட்டியை நடத்தும் உரிமையை பிசிசிஐ பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் காரணமாக, முழு போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படுகிறது. கடந்த 2023 ஆசியக் கோப்பையானது ஒருநாள் வடிவத்தில் நடத்தப்பட்ட நிலையில், 2025 ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட இருக்கிறது. இந்த மிகப்பெரிய போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பரில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியை வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.




பாகிஸ்தான் எதிராக விளையாடும் இந்திய அணி:
2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி தனது 2வது போட்டியில் வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும். இந்த போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் நேரடியாக மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் பிறகு, இந்திய அணி தனது 3வது போட்டியில் வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமானுக்கு எதிராக விளையாடுகிறது.
2025 ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகளுடன் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. அதேநேரத்தில், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை மோத முடியும்?
ASIA CUP 2025 pic.twitter.com/RTtWg3X3fs
— Pakistan Cricket Team USA FC (@DoctorofCricket) August 2, 2025
இரு அணிகளும் அந்தந்த குழுக்களில் முதல் 2 இடங்களுக்குள் வந்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் குறைந்தது இரண்டு முறையாவது மோதும், மேலும் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்தால், இரு அணிகளும் மூன்று முறை மோதலாம்.
இந்தியாவின் ஆசிய கோப்பை 2025 அட்டவணை:
- 2025 செப்டம்பர் 10: இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – அபுதாபி
- 2025 செப்டம்பர் 14: இந்தியா vs பாகிஸ்தான் – துபாய்
- 2025 செப்டம்பர் 19: இந்தியா vs ஓமன் – அபுதாபி
இந்த முறை ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி களமிறங்குகிறது. கடந்த 2023ம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய அணி மீண்டும் சாம்பியனாகும் முயற்சியில் கடுமையாக போட்டியிடும்.