Asia Cup 2025: ஆசிய கோப்பை இந்திய அணி.. ரிஷப் பண்ட் இடம் பெறமாட்டாரா?
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாமல் போகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான நிலையில் அணியில் பல முக்கிய வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் , கேஎல் ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய வீரர்களை தேர்வு குழு நிராகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2025ஆம் ஆண்டு டி20 வடிவத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் இடம் பெற மாட்டார் என சொல்லப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திய அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஆனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தான் விருப்ப பட்டியலில் முதலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் மாற்று வீரராக துருவ் ஜூரெல் மற்றும் ஜிதேஷ் சர்மா போன்றவர்கள் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2024 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் டி20, டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இதனால் இளம் வீரர்களை அணியின் எதிர்காலம் கொண்டு தேர்வு செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது




இப்படியான நிலையில் தான் வீரர்கள் தேர்வில் ரிஷப் பண்ட் நிச்சயம் அதிருப்தி ஏற்படும் அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. அதனை மையமாக வைத்து தான் வீரர்கள் தேர்வை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா , சூர்யகுமார் யாதவ் , ஹர்திக் பாண்ட்யா போன்றோர் அணியில் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வு குழு விரும்புவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு தகவல் உலா வருகிறது.
மேலும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதனால் அதற்கான அணியை வடிவமைக்கும் பொறுப்பில் ஆசிய கோப்பை போட்டி முன்மாதிரியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர் விரும்புவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. எனினும் வீரர்கள் உடல் தகுதி, காயம் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொள்ளும்போது கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரிஷப் பண்ட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.